அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் கலவரம் - மூன்று பேர் சுட்டுக் கொலை!

பிப்ரவரி 24, 2019 358

புதுடெல்லி (24 பிப் 2019): நிரந்தர குடியுரிமை சான்றிதழை வழங்க அருணாச்சல அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலத்தின் பூர்வ குடிமக்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். இதில் மூன்று பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜகவுடன் இணைந்து அருணாச்சலப் பிரதேச மக்கள் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இங்கு பீமா கண்டு முதல்வராக உள்ளார்.

சமீபத்தில் அரசு அமைத்த இணை அதிகார உயர்நிலைக்குழு அளித்த பரிந்துரையின்படி அந்த மாநிலத்தில் பூர்வக் குடிகள் அல்லாத 6 சமூகத்தினருக்கு, நிரந்தர குடியுரிமைச் சான்று வழங்க அம்மாநில அரசு முடிவு செய்தது.

இது தொடர்பாகக் கடந்த 22-ம் தேதி இரவு அருணாச்சலப் பிரதேச அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அறிவிப்பு வெளியிட்டதிலிருந்து மாநிலத்தின் பூர்வ குடிமக்கள் போராட்டத்திலும், வன்முறையிலும் இறங்கியுள்ளனர்.

இதனையடுத்து மாநிலம் முழுவதும் போராட்ட களமாக உருமாறியுள்ளது. மேலும் சாலைகளில் கூட்டமாக வலம் வரும் மக்கள் பொதுச்சொத்துக்களையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கித் தீவைத்து பெரும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் உச்ச கட்டமாக இன்று காலை முதல் போராட்டத்தைப் போராட்டக்காரர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். இட்டாநகரில் உள்ள நிதி விஹார் பகுதியில் துணை முதல்வர் இல்லத்தின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி, தீவைத்து விட்டு பின்னர் தப்பியோடியுள்ளனர். மேலும், இட்டாநகரில் உள்ள காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்துக்குள் நுழைந்து சூறையாடினார்கள்.

இதனையடுத்து இட்டாநகர், நகர்லாகுன் ஆகிய நகரங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை போலீஸார் பிறப்பித்துள்ளனர். கடந்த இரு நாட்களாக நடந்து வரும் வன்முறையிலும், கல்வீச்சிலும் 24 காவலர்கள் உள்ளிட்ட 35 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து முதல்வர் பீமா கண்டுவை, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைப்பேசியில் அழைத்து பேசினார். அப்போது தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...