தாய் மண்ணில் கால் பதித்தார் அபிநந்தன் - வீடியோ!

மார்ச் 01, 2019 429

வாகா (01 மார்ச் 2019): பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டிருந்த இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் இன்று இரவு 9 மணியளவில் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய படைகள் தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் படைகளால் சுட்டு வீழ்த்தப் பட்ட விமானத்திலிருந்து தப்பிய இந்திய விமானப் படை விமானி விங் மாஸ்டர் அபினந்தன் பாகிஸ்தானிடம் சிக்கிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. “அவரை தாக்கக் கூடாது. உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று இந்தியா எச்சரித்தது. ஜெனீவா ஒப்பந்தத்தின் பேரில் அபினந்தன் விடுவிக்கப்பட வேண்டும் என்று தூதர் மூலம் வலியுறுத்தப்பட்டது.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நேற்று காலை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நேரில் சென்று அபினந்தனை விடுவிக்க வலியுறுத்தினார். இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சவூதி அரேபிய இளவரசர் முகமதுபின் சல்மான், அபுதாபி இளவரசர் ஜாயித் அல் நயேன் ஆகியோர் பிரதமர் மோடியுடன் போனில் பேசினார்கள். பிறகு அவர்கள் அனைவரும் அபினந்தனை உடனே விடுவிக்கக் கோரி பிரதமர் இம்ரான்கானுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இதற்கிடையே, பாகிஸ்தான் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், அபினந்தனை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இந்தியாவும் ஓசையின்றி நேற்று முன்தினம் இரவு முதல் முப்படைகளையும் தயார்படுத்தியது.

இதற்கிடையே இம்ரான்கான் நேற்று பிற்பகல் பாராளுமன்றத்தில் பேசுகையில், “அபினந்தன் நாளை (இன்று) விடுதலை செய்யப்படுவார்” என்று அறிவித்தார்.

அபினந்தனை வரவேற்க இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் குழு இன்று காலை டெல்லியில் இருந்து வாகாவுக்கு புறப்பட்டு சென்றது. அதுபோல அபினந்தனின் பெற்றோர் வர்தமான்-டாக்டர் ஷோபா மற்றும் உறவினர்களும் டெல்லியில் இருந்து விமானத்தில் அமிர்தசரசுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து காரில் வாகா எல்லைக்கு சென்றனர்.

இதற்கிடையே, இன்று காலை பாகிஸ்தானில் இருந்து அபினந்தன் விடுவிக்கப்பட்டார். 35 வயது நிரம்பிய அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் சிறைபிடித்ததும் எல்லையில் இருந்து ராவல்பிண்டிக்கு அழைத்து சென்று இருந்தனர். அங்கு ராணுவ முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.

அங்கு வைத்துதான் அவரிடம் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் பேசினார்கள். நேற்றும் அவர் அங்குதான் வைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று மதியம் அவர் ராவல்பிண்டியில் இருந்து லாகூர் நகருக்கு பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பாகிஸ்தான் அதிகாரிகள் வாகனங்கள் புடைசூழ வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.

இன்று மாலை வாகா எல்லை வந்தடைந்த அபினந்தனை இந்திய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். ஆனால், அவரை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, இரவு 9 மணிக்கு ஒப்படைக்கப்பட உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இரவு 9 மணியளவில் பாகிஸ்தான் அதிகாரிகள் தமிழக வீரர் அபினந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...