ரஃபேல் போர் விமானம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயம் - மத்திய அரசு தகவல்!

மார்ச் 06, 2019 470

புதுடெல்லி (06 மார்ச் 2019): ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

அவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த டிசம்பரில், ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யும் நடைமுறையில், எந்த மோசடியும் நடந்ததற்கான சந்தேகம் எழவில்லை என்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த சீராய்வு மனுக்கள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ரஃபேல் குறித்த சில முக்கிய ஆவணங்கள் ராணுவ அமைச்சகத்தின் இன்னாள் அல்லது முன்னாள் ஊழியர்களால் திருடப்பட்டுள்ளன. அப்படி திருடப்பட்டவை எல்லாம் ரகசிய ஆவணங்கள். அது பொதுத்தளத்தில் இருக்கக்கூடாது என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ரஞ்சன் கோகோய், ஆவணங்கள் திருடப்பட்டது என்றால் அது தொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல், ஆவணங்கள் எப்படி கசிந்தன என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். என்றார்.

ரஃபேல் போர்விமான ஒப்பந்தம் தொடர்பாக ஊழல் நடந்ததை பிரான்சின் பத்திரிகை உறுதி செய்த நிலையில் ஆவணங்கள் திருடப் பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...