பாபர் மசூதி - ராமர் கோவில் விவகாரத்தில் மூன்று பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு நியமனம்!

மார்ச் 08, 2019 517

புதுடெல்லி (08 மார்ச் 2019): பாபர் மசூதி - ராமர் கோவில் விவகாரத்தில் தீர்வு ஏற்படுத்த , உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

பாபர் மசூதி - ராமர் கோவில் தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் 14 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்தே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோர் கொண்ட புதிய அமர்வு விசாரித்தது.

இந்நிலையில் இன்று இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என எதிர் பார்க்கப் பட்டது. ஆனால் மத்தியஸ்தர்கள் மூலம் இவ்விவகாரத்திற்கு தீர்வு காண மூன்று பேர் கொண்ட குழுவை நியமனம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்கள் குழுவில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெறுவர். மத்தியஸ்தர்கள் நடவடிக்கை அனைத்தையும் கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும். மத்தியஸ்த குழுவின் பேச்சுவார்த்தை விவரங்கள் தொடர்பான எந்த செய்தியையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது.

மத்தியஸ்த நடவடிக்கையில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் குழுவினர் உச்ச நீதிமன்ற பதிவாளரை தொடர்பு கொள்ள வேண்டும். 4 வாரங்களுக்குள் தங்கள் அறிக்கையை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். மத்தியஸ்த நடவடிக்கையை 8 வாரங்களுக்குள் மொத்தமாக முடித்துக் கொள்ள வேண்டும்.

பைஸாபாத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு உத்தர பிரதேச அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும். இந்த பேச்சுவார்த்தைக்கு கூடுதல் உறுப்பினர்கள் தேவை என்றால் அதனை அந்த குழுவினரே நியமித்துக் கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...