மக்களவை தேர்தலில் அத்வானி உள்ளிட்ட நான்கு தலைவர்கள் போட்டியிட தடை!

மார்ச் 10, 2019 750

புதுடெல்லி (10 மார்ச் 2019): மக்களவை தேர்தலில் வேட்பாளராக போட்டியிட அத்வானி உள்ளிட்ட 4 மூத்த தலைவர்களுக்கு பாஜ தலைமை ‘சீட்’ கொடுக்க மறுத்துவிட்டது.

பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், பாஜவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு நடந்த பொதுத் தேர்தலில் ‘பாரதிய ஜன சங்கம்’ கடந்த 1957ம் ஆண்டு போட்டியிட்டது. அப்போது அக்கட்சியில் முக்கிய தலைவர்களாக வாஜ்பாய், எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் இருந்தனர். இதில் வாஜ்பாய்தான் ஜனசங்கம் சார்பில் நாடாளுமன்றத்துக்குச் சென்ற முதல் எம்பி. தொடர்ந்து, 1977ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அப்போதைய இந்திய தேசிய காங்கிரசையும் இந்திரா காந்தியையும் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாரதிய லோக்தள், சோஷியலிஸ்ட் கட்சி போன்ற இடது, வலதுசாரி கட்சிகள் இணைந்து உருவாக்கிய ஜனதா கட்சியில் ஜனசங்கம் கட்சி இணைந்தது.

பின்னர், கடந்த 1980ம் ஆண்டில் ஜனதா கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, ஜனசங்கத்தை சேர்ந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கினர். அந்த கட்சி 18 ஆண்டுகள் கழித்து மத்தியில் ஆட்சியைப் பிடித்தாலும், கடந்த 2014ம் ஆண்டு தேர்தலிலாவது வெற்றி பெற்று பிரதமர் பதவியை அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் அத்வானி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர் போன்ற பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, கட்சியின் தேசிய தலைவராக இருக்கும் அமித்ஷாவின் தலைவர் பதவி கடந்த ஜனவரியுடன் முடிந்தது. ஆனாலும், வரும் மக்களவைத் தேர்தலால் உட்கட்சித் தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. பாஜவைப் பொறுத்த வரை தொடர்ந்து 2 முறை (தலா 3 ஆண்டுகள்) தலைவர் பதவி வகிக்கலாம் என்ற விதிமுறை உள்ளதால், அமித் ஷா தேசிய தலைவராக தொடர்கிறார்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜ நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பான பணிகள் உள்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. தேர்தல் அட்டவணை வெளியிட ஒருசில நாட்களே உள்ள நிலையில், பாஜ நாடாளுமன்ற குழுவின் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, பாஜ மூத்த தலைவர்கள் கூறியதாவது: கொள்கை ரீதியான முக்கிய முடிவெடுக்கக் கூடிய பாஜ நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடந்தது. இதில், வரும் மக்களவை தேர்தலில் வேட்பாளராகக் களம் இறக்கப்படுவோர் 75 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால், தற்போது அந்த வயதுடைய சிலர் மக்களவை, மாநிலங்களவையில் எம்பியாக உள்ளனர்.

ஏற்கனவே 75 வயதானவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படவில்லை. தேர்தல் பிரசாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் வேட்பாளர் தேர்வில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த வாரம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். கடந்த 2014ல் மோடி பிரதமராகப் பதவியேற்ற பின், கட்சியில் 75 வயது கடந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. அந்த வகையில், குஜராத் முதல்வராக இருந்த ஆனந்தி பென் பட்டேல், மத்திய அமைச்சர்களாக இருந்த நஜ்மா ஹப்துல்லா, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் 75 வயது பூர்த்தியானவுடன் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

வருகிற தேர்தலில் 75 வயதடைந்தவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், 75 வயதைத் தாண்டியுள்ள மூத்த தலைவர்கள் அத்வானி (91), முரளி மனோகர் ஜோஷி (85), பி.சி.கந்தூரி (84), கால்ராஜ் மிஸ்ரா (77) ஆகியோருக்கு ‘சீட்’ கிடைப்பது கஷ்டம். ஆனால், அவர்களுக்கு ராஜ்யசபா எம்பி போன்ற பதவிகள் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. மோடி, மீண்டும் வாரணாசியில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

குஜராத் முதல்வராக இருந்த மோடி, 2002ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை தொடர்ந்து நடைபெற்ற அம்மாநிலச் சட்டசபை தேர்தலில் பாஜவுக்கு வெற்றி தேடித்தந்ததால், ‘மோடி தலைமையில் குஜராத் அபார வளர்ச்சி கண்டுள்ளது’ என்று செய்யப்பட்ட பிரசாரம், அவரை தேசிய அரசியலுக்குக் கொண்டு வந்தது. பிரதமர் பதவியை நோக்கி அத்வானி காய்களை நகர்த்தி வந்தநிலையில், நிலைமை கைமீறிப்போனதால், மோடியை முன்னிலைப்படுத்தியது பாஜவின் சார்பு அமைப்புகள்.

அதனால், வேறுவழியின்றி அத்வானி ஓரங்கட்டப்பட்டார். மோடியைப் பிரதமர் வேட்பாளராக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த அத்வானி, பாஜ தேர்தல் கமிட்டித் தலைவர் பதவி உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகினார். கட்சியின் இதர தலைவர்கள் அவரை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து 2014ல் பாஜ கட்சி ஆட்சியைக் கைப்பற்றினாலும் கூட, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அதேபோல், இன்று முரளி மனோகர் ஜோஷி போன்ற மூத்த தலைவர்களின் நிலைமையும் உள்ளன. சில கூட்டங்களில், அத்வானியை மோடி அவமதித்துவிட்டார் என்ற புகைச்சலும் அவ்வப்போது ஏற்படுவதுண்டு.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...