நியூசிலாந்து மசூதிகள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு கோஹ்லி, அஃப்ரிடி கடும் கண்டனம்!

மார்ச் 15, 2019 318

கிறிஸ்ட்சர்ச் (15 மார்ச் 2019): நியூசிலாந்து மசூதிகள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பிசிசிஐ கிரிக்கெட் கேப்டன் கோஹ்லி, மற்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃப்ரிடி ஆகியோர் கடும் கண்டனம் தெர்வித்துள்ளனர்.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று ஏராளமான மக்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதி, தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர்.

இதேபோல் அருகில் உள்ள மற்றொரு மசூதியிலும் ஒரு பயங்கரவாதி துப்பாக்கி சூடு நடத்தினான். இரண்டு இடங்களிலும் நடந்த தாக்குதல்களில் 49 பேர் உயிரிழந்ததாகவும், பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன் தெரிவித்துள்ளார். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணியினர் தாக்குதல் நடத்தப்பட்ட மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதான் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. எனினும் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப் பட்டனர்.

இதுகுறித்து பதிவொன்று இட்டுள்ள வங்கதேச கிரிக்கெட் வீரர் தமீம் இக்பால், ""நாங்கள் அனைவரும் துப்பாக்கித்தாரிகளிடமிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டோம். இந்த பயமுறுத்தும் அனுபவத்திலிருந்து மீண்டு வருவதற்கு எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமீம் இக்பாலின் பதிவுக்கு பதிலளித்துள்ள கோஹ்லி, மற்றும் அஃப்ரிடி ஆகியோர் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். உலகின் அமைதியான மற்றும் பாதுகாப்பான நாடாக நியூசிலாந்தை கருதினேன் அங்கேயும் தீவிரவாதமா? என்று அஃப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் உலகம் முழுவதும் ஓரணியில் நின்று தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...