நியூசிலாந்து மசூதி பயங்கரவாத தாக்குதலில் 9 இந்தியர்கள் மாயம்!

மார்ச் 16, 2019 292

கிறிஸ்ட்சர்ச் (16 மார்ச் 2019): நியூசிலாந்து மசூதிகள் மீதான பயங்கரவாத தாக்குதலை அடுத்து 9 இந்தியர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மஸ்ஜித் அல் நூர் மசூதி மிகவும் புகழ் பெற்றது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், இந்த மசூதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 49 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் கூறுகையில், இந்த நாள் நியூசிலாந்து வரலாற்றில் மிகவும் மோசமான நாளாகும். இது தீவிரவாத தாக்குதல் என தெளிவாக தெரிகிறது. இது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல். இந்த தாக்குதல் சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை. ஆனால் 3 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். தீவிர வாதம் எந்த வகையில் வந்தாலும் அதை ஒருங்கிணைந்து எதிர்ப்போம் என்றும், தீவிர வாதத்துக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என நியூசிலாந்துக்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் இறந்தவர்களில் 2 பேர் இந்தியர்கள் என்றும், ஒருவர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகிறார் என்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரது மற்றொரு டிவிட்டர் பதிவில், ஹைதராபாத்தை சேர்ந்த இக்பல் ஜஹாங்கீர் என்பவரது சகோதரர் அகமது ஜஹாங்கீர் இந்த தாக்குதலில் சுடப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சை பெற்று வரும் ஜஹாங்கீரை சந்திக்க அவரது குடும்பம் உடனடியாக நியூசிலாந்த் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இதற்கு தெலுங்கானா முதல்வரும், வெளியுரவுத்துறை அமைச்சரும் உதவி செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...