கேரளாவில் ராகுல் காந்திக்கு கடினம் கொடுக்கும் பாஜக!

ஏப்ரல் 01, 2019 396

புதுடெல்லி (01 ஏப் 2019): கேரளாவில் உள்ள வயநாட்டில் போட்டியிடும் காங் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பெயரை அறிவித்தது பாஜக.

கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுவது தென் மாநிலங்களில் சுவாரஸ்யத்தை அதிகப் படுத்தியுள்ளது. இந்நிலையில் வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி போட்டியிடுவார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று அறிவித்துள்ளார்.

'வயநாடு தொகுதிக்கான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளியின் பெயரை நான் பெருமையுடன் அறிவிக்கிறேன். மிக ஆற்றல் வாய்ந்த வீரியமான இளம்தலைவரான துஷார் வெள்ளப்பள்ளி நம்முடைய சமூகநீதி மற்றும் வளர்ச்சி ஆகிய குறிக்கோள்களின் பிரதிநிதியாக திகழ்கிறார். அவருடன் இணைந்து கேரள அரசியலில் மாற்றுசக்தியாக தேசிய ஜனநாயக கூட்டணி மாறும்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

பாரத் தர்ம ஜன சேனா கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து கேரளாவில் இந்த தேர்தலை சந்திக்கிறது.

இதற்கிடையே ராகுலை தோற்கடிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...