எஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் மரணம்!

ஏப்ரல் 02, 2019 408

சென்னை (02 ஏப் 2019): எஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் எ.சயீத் உடல் நலக்குறைவால் காலமானார்.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினருமான கேரளாவை சேர்ந்த எ.சயீத் அவர்கள், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று மதியம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்கள்.

பல்வேறு சமூக தளங்களில் பயணித்து, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் துவக்க காலத்தில் தேசிய பொதுச்செயலாளராக இருந்து தேசிய தலைவராக பொறுப்பேற்ற சயீத் சாகிப் அவர்கள், இந்தியா முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வளர்ச்சியினை கொண்டு சென்ற சிறந்த ஆளுமையாக திகழ்ந்தார். அநீதிக்கெதிராகவும், பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வந்தார். இலங்கையில் நடைபெற்ற ஈழப்படுகொலையை கண்டித்து தலைநகர் டெல்லியில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டத்தை நடத்தினார்.

சிறந்த எழுத்தாளர், மனித உரிமைப் போராளி, அரசியல் தலைவர், மார்க்க அறிஞர் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆளுமைத் தன்மைகளை தன்னகத்தே கொண்டவரும், சமகாலப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை முன்வைக்கும் சயீத் சாகிப் அவர்களின் மரணம் இறைவனின் நாட்டப்படி நிகழ்ந்தாலும், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத்துக்காகவும், அவர்களை சக்திப்படுத்துவதற்காகவும் பல்வேறு தளங்களில் உழைத்து வந்த அன்னாரின் மரணம் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.

சயீத் சாகிப் அவர்களின் மறைவால், அன்னாரை இழந்து பெரும் துயரில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...