தேர்தலை ஒட்டி மேலும் இரண்டு படங்களை வெளியிட தடை!

ஏப்ரல் 11, 2019 379

புதுடெல்லி (11 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி மோடி வாழ்க்கை வரலாறு படத்திற்கு தடை விதிக்கப் பட்ட நிலையில் மேலும் இரண்டு படங்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

பிஎம் நரேந்திர மோடி’ என்ற இந்தப்படம் நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்தே எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்த நிலையில் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல பேர் பி.எம்.நரேந்திர மோடி படத்திற்கு எதிராக மனுத்தாக்கல் செய்தனர். இதுகுறித்த விசாரணையில் தேர்தல் விதிமுறைகளை இந்தப் படம் மீறுவதாக நாங்கள் கருதவில்லை எனவும் ‘பி.எம்.நரேந்திர மோடி’ படத்திற்கு தடை விதிக்க முடியாது எனவும் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இதற்கிடையே படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் படத்துக்கு ’யூ’ சான்றிதழ் வழங்கப்பட்டு படம் நாளை வெளியாகும் என கூறப்பட்டது. இந்நிலையில் பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இதேபோல ராம்கோபல் வர்மா இயக்கத்தில் வெளியாக இருந்த ஆந்திரம் மாநிலம் முன்னாள் முதல்வரான என்.டி,ராமாராவின் வாழ்க்கையை சொல்லும் “லக்ஸ்மி என்டிஆர்” படத்தை வெளியிடவும் தேர்தல் ஆணையம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கானா முதல் சந்திரசேகர ராவின் வாழ்க்கை வரலாற்று படமான “உதயமா சிம்ஹம்” வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு படம் பிரசாரமாக இருந்துவிடக் கூடாது என்றும் மறு உத்தரவு வரும் வரை திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...