பிரதமர் மோடியை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர்கள் குடியரசுத் தலைவருக்கு அவசர கடிதம்!

ஏப்ரல் 12, 2019 338

புதுடெல்லி (12 ஏப் 2019): பிரதமர் மோடியின் பிரச்சாரங்களில் பாதுகாப்பு படையின் தாக்குதல்கள், சின்னங்கள், புகைப்படங்களை பயன்படுத்த கூடாது என்று 150 முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் இந்திய குடியரசுத் தலைவருக்கு அவசர கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றுள்ள நிலையில் அடுத்த கட்ட வாக்குப் பதிவுகளுக்கு காரசாரமாக பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்து பாஜக போஸ்டர்களை ஒட்டி பிரச்சாரங்களை மேற்கொண்டனர். ஆனால் ராணுவ வீரர்கள், ராணுவம் குறித்து பிரச்சாரத்தில் பேச தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது.

எனினும் பிரதமர் மோடி இந்த தடையை மீறி ராணுவம் குறித்து பிரச்சாரத்தில் பேசினார். பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த போது ''நான் ஒரு விஷயம்தான் கேட்க விரும்புகிறேன். முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் உங்கள் வாக்குகளை பாலக்கோட் தாக்குதலுக்காக சமர்ப்பணம் செய்யுங்கள். அங்கு தாக்குதல் நடத்திய நம் படைக்காக உங்கள் வாக்குகளை அளியுங்கள். புல்வாமாவில் இறந்த நமது வீரர்களுக்காக உங்கள் வாக்குகளை சமர்ப்பணம் செய்யுங்கள். '' என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில்தான் தற்போது முன்னாள் ராணுவ வீரர்கள் 150 பேர் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு முக்கிய கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். முன்னாள் பாதுகாப்பு படை வீரர்களின் குழுவில் இருந்து எங்களின் உச்ச தளபதிக்கு கடிதம் என்று தலைப்பிட்டு அவர்கள் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்கள்.

மொத்தம் 150 முன்னாள் கடற்படை, தரைப்படை, விமானப்படை வீரர்கள் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்கள். இதில் முன்னாள் ராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகளும் அடக்கம். முன்னாள் ராணுவ தளபதிகளான சுனித் பிரான்சிஸ், ஷங்கர் ராய் சவுத்திரி, தீபக் கப்பூர், கடற்படை முன்னாள் தளபதிகள் லட்சுமி நாராயணன் ராமதாஸ், விஷ்ணு பகவத், சுரேஷ் மேத்தா, விமானப்படை முன்னாள் தளபதி என்சி சூரி ஆகியோர் இதில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

முன்னாள் ராணுவ வீரர்கள் குடியரசுத் தலைவருக்கு மோடிக்கு எதிராக கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...