இந்தியாவை விட்டு 36 தொழிலதிபர்கள் தப்பியோட்டம் - அதிர வைக்கும் தகவல்!

ஏப்ரல் 16, 2019 413

புதுடெல்லி (16 ஏப் 2019): விஜய் மல்லையாவைப் போல் இந்தியாவை விட்டு 36 தொழிலதிபர்கள் தப்பியோடியுள்ளதாக அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கிகளில் பண மோசடியில் ஈடுபட்டு அதனை திருப்பி அடைக்காமல் தொழிலதிபர் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட தொழிலதிபர்கள் மோடி ஆட்சியில் நாட்டை விட்டு தப்பி ஓடினர். இவர்கள் மட்டுமல்லாமல் மேலும் சிலரும் தப்பியோடிய தகவல் வெளியானது.

இந்நிலையில் மத்திய அரசுத் துறையில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், தனியாகப் பயணம் செய்ய அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்னும் நிறுவனத்திடம் அரசு 3600 கோடிக்கு ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு, அரசு சார்பாக ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி பலர் கைது செய்யப் பட்டனர். அவர்களில் ஒருவரான சுரேஷ் மோன் குப்தா, தன்னை ஜாமீனில் வெளியிடக்கோரி மனு அளித்ததிருந்தார். அந்த மனுவில், எனக்கு சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்கிறது. அதைக் கெடுக்க வேண்டாம் என்கிற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார். பிறகு, அந்த மனுவுக்கு எதிராக அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் அதைக் குறிப்பிட்டுப் பேசியதுடன், நம் நாட்டில் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோருக்கும்தான் நல்ல மதிப்பு இருந்தது. அவர்கள் பணமோசடி செய்து நாட்டை விட்டு ஓடவில்லையா. அவர்கள் மட்டுமா... கடந்த சில வருடங்களில் அவர்களைப் போல தொழிலதிபர்கள் 36 பேர் நாட்டைவிட்டு தப்பித்துப் போயிருக்கிறார்கள்" என்றார்.

கடந்த சில வருடங்களில், விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் மட்டும்தான் பணமோசடி செய்து நாட்டை விட்டுப் போயிருக்கிறார்கள் என்பது பெரும்பான்மை மக்களுக்குத் தெரியும். போகிறபோக்கில், வழக்கறிஞர் இதைச் சொல்லும்போதுதான் 36 பேர் தப்பித்திருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அதுவும், குறிப்பிட்ட வழக்கறிஞர் அமலாக்கப்பிரிவைச் சார்ந்தவர் என்பதும், அவர் நீதிபதி முன்பு அதைக் கூறியிருக்கிறார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. இந்த 36 தொழிலதிபர்கள் யார். இவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்ல யார் யார் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை மேற்கொண்டு விசாரித்தால்தான் தெரிய வரும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...