தூக்குத் தண்டனை கைதி சிறையிலிருந்து தப்பியோட்டம்!

ஏப்ரல் 28, 2019 385

பெல்காம் (28 ஏப் 2019): கர்நாடக சிறையிலிருந்து தமிழக தூக்குத் தண்டனை கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கொளத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவர் கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுகாவில் உள்ள அரலே கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். இங்கு ஈரோட்டை சேர்ந்த ராஜேந்திரன், ராஜம்மா, காசி, அவரது மனைவி சிலம்மா உள்பட 15 பேர் வேலை பார்த்தனர்.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி ராஜம்மா, சிலம்மாவிடம் முருகேசன் தவறாக நடக்க முயன்றார். இதில் ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரன், ராஜம்மா, சிலம்மா, அவரது கணவர் காசி, மகள் ரோஜா ஆகிய 5 பேரையும் வெட்டிக் கொன்றார்.

இச்சம்பவம் தொடரபாக முருகேசன் கைது செய்யப்பட்டார். விசாரணையின் முடிவில் முருகேசனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெல்காவி ஹிண்டல்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிறையில் இருந்த முருகேசன் திடீரென்று மாயமானார். அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறை முழுவதும் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. முருகேசன் ஜெயிலில் இருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு போலீசார் சென்றதால் சிறையில் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி முருகேசன் தப்பி உள்ளார். அவரை கர்நாடக போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...