ரம்ஜான் மாதத்தில் போர் நிறுத்தம் தேவை - மஹபூபா முஃப்தி கோரிக்கை!

மே 04, 2019 330

ஶ்ரீநகர் (04 மே 2019): ரம்ஜான் நோன்பு மாதத்தில் கடந்த ஆண்டைப் போலவே போர் நிறுத்ததை அறிவிக்குமாறு அரசுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா தாக்குதலுக்கு பின்னர், பிரிவினைவாத குழுக்களின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலிலும் சிறையிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாநிலத்தின் பல பகுதிகளில் சந்தேகத்துக்கிடமான நடமாட்டம் இருப்பதாக கிடைக்கும் உளவு தகவல்களின் அடிப்படையில் அப்பகுதிகளில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்த கூட்டுப் படையினர் அதிரடி வேட்டை மூலம் பலரை கைது செய்தும், சிலரை சுட்டுக் கொன்றும் வருகின்றனர்.

இந்நிலையில், வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை தொடங்கும் ரம்ஜான் நோன்பு மாதத்தில் கடந்த ஆண்டைப் போலவே போர் நிறுத்ததை கடைப்பிடிக்குமாறு மத்திய அரசுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, ஸ்ரீநகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மெகபூபா முப்தி, ’வாஜ்பாயின் வழித்தோன்றல் என்று தன்னை கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, வாஜ்பாய் கடைபிடித்த மனிதநேயம், மனிதாபிமானம் ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலம் இப்போதாவாது அதை நிரூபிக்க வேண்டும்.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்த மாநிலத்தில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் மற்றும் என்கவுன்ட்டர் நடவடிக்கைகளால் மக்கள் மிகுந்த வேதனையை அனுபவித்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் ரம்ஜான் நோன்பு காலம் ஆரம்பமாகிறது.

இது இறை வழிபாட்டுக்கான மாதம் என்பதால் கடந்த ஆண்டைப் போலவே தேடுதல் நடவடிக்கைகள், என்கவுன்ட்டர்கள் ஆகியவற்றை தவிர்த்து மத்திய அரசு போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சற்று நிம்மதியும் நிவாரணமும் கிடைக்கும்.

இதேபோல், புனிதமான இந்த ரம்ஜான் நோன்பு மாதம் தொழுகைக்கும் மன்னிப்பு கோருவதற்கும் தவறுகளுக்காக வருந்துவதற்குமான மாதம் என்பதை போராளிகளும் உணர்ந்து இந்த மாதத்தில் தாக்குதல்களை நடத்தாமல் அவர்கள் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்தார்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...