சவூதி சிறையில் உள்ள இந்திய கைதிகள் ரம்ஜானுக்கு முன் விடுதலை: பிரமர் மோடி!

மே 06, 2019 359

லக்னோ (06 மே 2019): எனது கோரிக்கையின் பேரில் 850 இந்தியர்கள் சவுதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலையொட்டி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர், உத்தரப் பிரதேசத்தின் பதோஹி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசிய மோடி, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். அவர் பேசியதாவது: "சவுதி அரேபியா இளவரசர் இந்தியா வந்திருந்தபோது, ரம்ஜானுக்கு முன்னதாக சிறைவாசிகளை விடுவிக்குமாறு அவரிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டார். பல நாடுகளில் முத்தலாக் முறை நடைமுறையில் இல்லை. பல முஸ்லிம் நாடுகள் பின்பற்றும் நடைமுறையை இந்திய இஸ்லாமிய சகோதரிகளுக்கும் தர விரும்புகிறோம். ஆண்கள், பெண்களுக்கு சம உரிமையை அரசியல் சாசனம் தந்துள்ளது. யாருடைய மத நம்பிக்கையையும் அவமதிக்கவில்லை. அரசியல் சட்டத்தையே பின்பற்றுகிறோம்.

சர்வதேச அளவில் இந்தியாவின் வளர்ச்சியே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட வைத்துள்ளது. ஒரு சிலர் பணம் சம்பாதிப்பதற்காக அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஆம்புலன்ஸ் ஊழல், கிராமப்புற சுகாதார திட்டத்தில் ஊழல் உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு சேவை ஆற்றுவோம். ஏழைகள் பயன்பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் உள்ளிட்டவற்றை தொடங்குவோம். கட்சிக்கு முன் நாட்டை முன்னிறுத்தவேண்டும், வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள எண்ணம் வேண்டும் உள்ளிட்டவை இருந்தால் மட்டுமே மாற்றத்தை கொண்டுவர முடியும்" .

கடந்த காலங்களில் தலைமைப் பொறுப்பேற்க காங்கிரஸ் இளவரசர் (ராகுல்) தயாராக இல்லை. அவரை தயார்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டன. இதையடுத்து, அந்த குடும்பத்துக்கு விசுவாசமான ஒருவர்(மன்மோகன் சிங்), பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் 10 ஆண்டுகள் ஆட்சி நடைபெற்றது. இதனால், 21-ஆம் நூற்றாண்டில் 10 ஆண்டு கால வளர்ச்சியை இந்தியா இழந்து விட்டது. ராகுல் காந்தி, பிரிட்டனில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தின் பெயர் "பேக் ஆப்ஸ்'. அதாவது "பேக் ஆபீஸ் ஆபரேஷன்'; ராகுல் காந்தியின் செயல்பாடுகளைப் போலவே அவரது நிறுவனத்தின் பெயரும் உள்ளது. அவர், எதையும் முன்னின்று செய்யாமல் திரைமறைவில் இருந்து வேலை செய்வதை குறிக்கும் விதமாக உள்ளது. இந்தியாவில் தொடங்கப்பட்ட பேக் ஆப்ஸ் நிறுவனம் மூடப்பட்டு விட்டது. அதே பெயரில் பிரிட்டனில் தொடங்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து ராகுல் காந்தி 2009-இல் வெளியேறிவிட்டார். அவரது கூட்டாளி 2011-ஆம் ஆண்டில், ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலுக்குத் தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார்.

ராகுல் காந்தியின் நண்பர் என்ற தகுதியைத் தவிர, நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பில் எந்தவித அனுபவமும் இல்லாத அவர், அந்த ஒப்பந்தத்தைப் பெற்றது எப்படி என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த விவகாரம் அம்பலமானதும், ராகுல் காந்தியும், அவரது ஆதரவாளர்களும் மெளனமாகி விட்டனர். போஃபர்ஸ் பீரங்கி ஊழல், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் எனத் தொடரும் காங்கிரஸின் ஊழல் வரிசையில் தற்போது நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்த ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நீரிலும், காற்றிலும், நிலத்திலும் காங்கிரஸ் செய்த ஊழல்கள் அம்பலமாகியுள்ளன. காங்கிரஸின் ஊழல் ரகசியங்களை இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல் அம்பலப்படுத்திவிட்டார். எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்பதே ராகுலின் குறிக்கோள். எனவேதான் நான் தனியாக இல்லை; கடவுள் என் பக்கம் இருக்கிறார் என்று கூறி வருகிறேன். என் மீது அதிகமாக சேற்றை வீசினால், அதற்கு நேர்மாறாக, அதிகமான ஆதரவு கிடைக்கும். அதிக எண்ணிக்கையில் "தாமரை' மலரும்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒருபோதும் ஏழைகள் நலனில் அக்கறை இருந்ததில்லை. அமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உறுப்பினராக அங்கம் வகிக்கும் மருத்துவமனைக்கு ஏழை ஒருவர் "ஆயுஷ்மான் பாரத்' மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சைப்பெறச் சென்றார். ஆனால், அந்த மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது. அதனால், அவர் உயிரிழக்க நேரிட்டது. எதிர்க்கட்சிகளின் நோக்கம்: எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி, தங்களது செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளும் இடமாக ஆட்சியதிகாரத்தைப் பார்க்கின்றன. ஆனால், பாஜகவோ மக்களுக்கு சேவை செய்யும் ஊடகமாக ஆட்சியைப் பார்க்கிறது. காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஜாதியின் பெயரால் மக்களிடையே மோதலை உருவாக்கி வந்தன. தற்போது, அவர்கள் தங்களது சொந்த நலனுக்காக ஒன்றிணைந்துள்ளனர்.

குஜராத் முதல்வராக பல ஆண்டுகள் பதவி வகித்திருக்கிறேன். நாட்டின் பிரதமராக கடந்த 5 ஆண்டுகளாக இருக்கிறேன். நான் ஆட்சியில் இருந்த இத்தனை ஆண்டுகளில், என் மீது ஊழல் குற்றச்சாட்டு ஏதும் உள்ளதா, வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி குவித்திருக்கிறேனா, எனது குடும்பத்தினருக்கு ஏதாவது சலுகை காட்டியிருக்கிறேனா, ஒரே இரவில் அவர்கள் செல்வந்தர்களாக மாற உதவியிருக்கிறேனா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...