வாரணாசியில் பிரியங்கா காந்தியின் பேரணியால் அதிர்ந்து போன மோடி

மே 16, 2019 438

வாரணாசி (16 மே 2019): வாரணாசியில் பிரியங்கா காந்தி நடத்திய பேரணியால் பாஜகவினர் அதிர்ந்து போயுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு வருகிற 19-ந்தேதி நடக்கும் இறுதி 7-வது கட்ட தேர்தலில் 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 59 தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக களம் இறங்கியுள்ள பிரதமர் மோடி கடந்த மாதம் 25-ந் தேதி அங்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது மிகப்பிரமாண்ட ரோடு ஷோவில் கலந்து கொண்டார்.

அதன்பிறகு மோடி 2 தடவை வாரணாசி சென்று தனக்கு ஆதரவு திரட்டினார். பிரசாரம் நிறைவு பெறும் நாளையும் மோடி வாரணாசியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராயை ஆதரித்து பிரசாரம் செய்தார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்துடன் களம் இறக்கப்பட்டுள்ள பிரியங்கா வாரணாசி தொகுதியிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

ஏற்கனவே 2 தடவை வாரணாசியில் பிரசாரம் செய்துள்ள பிரியங்கா நேற்று 3-வது முறையாக அங்கு சென்று ஆதரவு திரட்டினார். நேற்று மாலை வாரணாசி தொகுதிக்கு சென்று சேர்ந்த அவர் 6.15 மணிக்கு ரோடு ஷோ நடத்தினார்.

பிரதமர் மோடி கடந்த மாதம் வேட்பு மனுதாக்கல் செய்யும் முன்பு வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்து ரோடு ஷோவை தொடங்கினார்.

நேற்று பிரியங்காவும் அதே இடத்தில் இருந்து ரோடு ஷோவை நடத்தினார். மோடி செய்தது போல அவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மதன்மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு பிரியங்கா ரோடு ஷோ நடத்தினார்.

பிரியங்காவைப் பார்ப்பதற்காக அவர் ரோடு ஷோ செல்லும் பகுதிகளில் ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர். பிரியங்காவின் ரோடு ஷோவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

பிரியங்காவின் ரோடு ஷோ சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தது. வாரணாசி நகருக்குள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் பிரியங்காவின் ரோடு ஷோ நடந்தது.

வாரணாசியில் உள்ள லங்கா, அசி, படனி, சிவலா, சோனாபுரா, மதன்புரா பகுதிகள் வழியாக பிரியங்காவின் ரோடு ஷோ சென்றது. குறிப்பாக பிரதமர் மோடி கடந்த 25-ந்தேதி நடத்திய ரோடு ஷோ பாதைகளில் பெரும்பாலான பகுதிகளில் பிரியங்காவின் ரோடு ஷோவும் அமைந்தது.

இந்த ரோடு ஷோவால் வாரணாசி தொகுதி காங்கிரஸ் தொண்டர்களிடம் புத்துணர்ச்சி ஏற்பட்டு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி உள்ளனர். மேலும் பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதற்கிடையே மாயாவதி-அகிலேஷ் யாதவ் இருவரும் இன்று (வியாழக்கிழமை) வாரணாசியில் ரோடு ஷோ நடத்துகிறார்கள். இதனால் வாரணாசி தொகுதியில் உச்சக்கட்ட தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...