ராகுலுடன் சந்திரபாபு நாயுடு திடீர் சந்திப்பு - ஆட்சி அமைக்க புது வியூகம்!

மே 19, 2019 363

புதுடெல்லி (19 மே 2019): பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர விடாமல் தடுக்க சந்திர பாபு அனைத்து எதிர் கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார்.

டெல்லியில் முகாமிட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் உட்பட எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து, அனைவரையும் ஓரணியில் திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் மூலம், பாஜ மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க வியூகம் வகுத்து வருகிறார்.

மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இத்துடன், 7 கட்டமாக அறிவிக்கப்பட்ட மக்களவை தேர்தல் முடிவுக்கு வருகிறது. தேர்தல் முடிவு 23ம் தேதி வெளியாகிறது. இதில், ஆளும் பாஜ, காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காது என கருதப்படுகிறது. இருப்பினும், மாநில கட்சிகளை கூட்டணியில் இழுத்து பாஜ மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுப்பதில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

இதற்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், லோக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் சுதாகர் ரெட்டி, டி.ராஜா ஆகியோரையும் சந்தித்து ஒன்றாக இணைய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்திரபாபு நாயுடு லக்னோவில் நேற்று மாலை சந்தித்து பேசினார். திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரையும் ஏற்கனவே சந்தித்து பல கட்ட ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதனால் மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவு பெரும் சவால் காத்திருக்கிறது என்பது உண்மை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...