கருத்துக் கணிப்பு முடிவுகளை தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து ஏற்பாடு!

மே 21, 2019 434

புதுடெல்லி (21 மே 2019): நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை அடுத்து பாஜக அதன் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்துள்ளது.

ஏழு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப் பதிவுகளின் வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் நடக்க உள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவற்றில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பாஜ கூட்டணிக்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும் சில கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதனால், வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு கூட்டணி அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாஜவும் தங்களது கூட்டணிக் கட்சி தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, டெல்லியில் இன்று பாஜ கூட்டணி கட்சி தலைவர்களை கவுரவிக்கும் வகையில் பெரிய அளவில் விருந்து நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் அமித்ஷா ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. விருந்தில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பாஜ கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை முதல்வர் ஓ,.பன்னீர் செல்வம் ஆகியோரும் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

இதற்கிடையே ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜ அல்லாத ஆட்சி ஏற்படுத்த டெல்லியில் முகாமிட்டு அனைத்துக் கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...