பாஜக வெற்றி குறித்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய செயலர் பேட்டி!

மே 25, 2019 814

லக்னோ (25 மே 2019): நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்து இந்திய முஸ்லிம்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை என்று அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board (AIMPLB)) தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுக்க பாஜக மட்டும் தனியாக 303 இடங்களில் வென்றுள்ளது. பாஜக அக்கூட்டணி 363 இடங்களில் வென்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் பாஜக வெற்றி பெற்றிருப்பது முஸ்லிம்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே முஸ்லிம்களுக்கு எதிரான பல சட்டங்களை இயற்ற பாஜக முற்பட்டு வரும் நிலையில் மீண்டும் ஆட்சி அமைத்திருப்பது அதற்கு இலகுவாக வழி அமைத்துக் கொடுத்திருப்பதாகவே முஸ்லிம்கள் உணர்கின்றனர்.

இது இப்படியிருக்க, இந்த வெற்றி குறித்து அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய பொதுச் செயலாளர் மவுலானா முஹம்மது வாலி ரஹ்மானி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாஜகவின் வெற்றி குறித்து முஸ்லிம்கள் கவலை கொள்ள வேண்டாம். இந்த சூழ்நிலையில் முஸ்லிம்கள் மன தைரியத்தை வளர்த்துக் கொள்ள முயல வேண்டும். மனம் தளராமல் ஒருவருக்கொருவர் ஊக்கப் படுத்திக் கொள்ள முயல வேண்டும். நடந்தவை பற்றி சிந்திக்காமல் இனி நல்லவையாக நடக்க, வேண்டுமான முயற்சிகளில் முஸ்லிம்கள் முயல வேண்டும்.

உத்திர பிரதேசத்தை பொறுத்தவரை சென்ற 2014 ஆம் ஆண்டு ஒரு முஸ்லிம் எம்பி கூட நாடாளுமன்றம் செல்லவில்லை. ஆனால் இவ்வருடம் ஆறு முஸ்லிம் எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இதுவே மிகப்பெரிய ஊக்கம்தான். எனவே இனி நடப்பவை நல்லவையாகவே நடக்கும் என்று நம்புவோம்" என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...