குஜராத்தில் மோடிக்கு கோலாகல வரவேற்பு!

மே 26, 2019 297

அகமதாபாத் (26 மே 2019): நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராகும் நிலையில் மோடிக்கு சொந்த மாநிலமான குஜராத்தில் கோலாகல வரவேற்பு அளிக்கப் பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வெற்றிக்கு பின்னர் முதன்முறையாக இன்று மாலை அகமதாபாத் நகருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு குஜராத் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அகமதாபாத் அருகேயுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மோடி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பேசிய மோடி, சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் அமைந்துள்ள 4 மாடிகள் கொண்ட வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த 22 மாணவ-மாணவிகளின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், அகமதாபாத் நகரில் உள்ள பாஜகவின் குஜராத் தலைமை அலுவலகத்துக்கு வந்த மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை அங்கு திரண்டிருந்த பாஜகவினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். தொண்டர்களின் வாழ்ததுக்களை ஏற்றுக்கொண்ட மோடி அவர்களை பார்த்து மகிழ்ச்சியுடன் கைகளை அசைத்து, வணக்கம் தெரிவித்தார்.

இன்றிரவு தனது தாயாரை சந்திக்கும் பிரதமர் மோடி அவரிடம் வாழ்த்து பெற்ற பின்னர் நாளை வாரணாசி தொகுதிக்கு சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

முன்னதாக குஜராத்தில் நடைபெற்ற வெற்றிவிழாவில் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...