சாதிக் கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை!

மே 27, 2019 430

மும்பை (27 மே 2019): மும்பையில் சாதிக் கொடுமையால் மருத்துவ மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார் பாயல் தட்வி. இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைத்து மருத்துவம் பயின்று வந்த இவருக்கு மருத்துவராகி பழங்குடியினருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே கனவாக இருந்தது.

ஆனால் கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அவர் பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால், அவர் கல்லூரியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தூக்கு மாட்டிக் கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அவர் பயின்று வந்தத மருத்துவ கல்லூரியில் அங்கிருந்த மூன்று மருத்துவர்கள், பாயலை சாதியின் அடிப்படையில் பேசி துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனை தாங்கிக் கொள்ள இயலாமல் பாயல் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

மேலும் சில மூத்த உயர் ஜாதி மாணவர்கள் நோயாளிகளுக்கு முன்பே வைத்து பாயலை சாதி ரீதியாக கொடுமைப் படுத்தியுள்ளனர். இது அவருக்கு மன உளைச்சலை தந்துள்ளது. இதனாலேயே பாயல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பாயலின் தற்கொலை மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதிக் கொடுமைக்கு எதிராக பலர் பல முயற்சிகள் எடுத்து வந்தாலும் அது முடிவுறா கதையாகவே உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...