காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் - விரைவில் தேர்வு!

மே 28, 2019 349

புதுடெல்லி (28 மே 2019): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்வதில் உறுதியாக உள்ளார். இதனால் புதிய தலைவரை விரைவில் தேர்தெடுக்கப் படலாம் என தெரிகிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ள நிலையில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதற்கான கடிதத்தையும் கட்சியிடம் ஒப்படைத்துவிட்டார். எனினும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியின் முடிவை ஏற்கவில்லை. ஆனால் ராகுல் காந்தி தனது முடிவில் மாற்றம் இல்லை என தெரிவித்து விட்டார்.

கட்சியின் தோல்வி ஒருபுறம் என்றாலும், அமேதியில் ராகுல் காந்தி தோல்வி அடைந்தது அவரை உளவியல் ரீதியாக பாதித்துள்ளது. ராகுல் காந்தியின் முடிவை மாற்றிக் கொள்ளுமாறு மூத்த தலைவர்கள் அஹமது பட்டேல், வேணு கோபால் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். எனினும் ராகுல் காந்தியின் முடிவில் மாற்றம் இல்லை.

இதனால் காங்கிரஸ் காரிய கமிட்டி இந்த வார இறுதியில் கூடி ராகுல் காந்தியின் ராஜினாமா குறித்து விவாதிக்கும் என்றும் அன்றே புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் என்றும் தெரிகிறது.

இதற்கிடையே முன்னதாக கூடிய காரிய கமிட்டியில் தோல்வி குறித்து மட்டுமே விவாதித்ததாகவும், ஆனால் ஊடகங்கள் வேறு விதமாக எழுதி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டதாகவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...