பாலியல் குற்றவாளியை சிறையில் சந்தித்த பாஜக சாமியார் எம்பி!

ஜூன் 08, 2019 351

சீதாப்பூர் (08 ஜூன் 2019): சிறுமியை வன்புணர்வு செய்த வழக்கில் சிறையில் இருக்கும் குற்றவாளியை பாஜகவின் எம்பியும் சாமியாருமான சாக்‌ஷி மகாராஜ் சந்தித்துப் பேசியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் குல்தீப் சிங் செங்கார். 51 வயதான இவரும், இவரது சகோதரர் அதுல் சிங்கும் சேர்ந்து, உன்னாவ் நகரைச் சேர்ந்த சுரேந்திரா சிங் என்பவரின் 17 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். அத்துடன், சுரேந்திரா சிங்கையும் அடித்துக் கொலை செய்தனர்.

இந்த சம்பவத்தில், எம்எல்ஏ-வின் தம்பி, அதுல் சிங்கை மட்டும் கைது செய்த போலீசார், எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீது வழக்குக் கூட பதிவு செய்யாமல் விட்டு விட்டது. நீண்ட இழுபறிக்குப் பின்பு, அலகாபாத் உயர் நீதிமன்றம் தலையிட்ட பின்னரே, செங்கார் கைது செய்யப்பட்டு, சீதாப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

குல்தீப் சிங் செங்கார் மீதான வல்லுறவுக் குற்றச்சாட்டை உறுதிசெய்துள்ள சிபிஐ, அதுதொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குல்தீப் சிங் செங்காரை, உன்னாவ் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.யும், சாமியாருமான சாக்ஷி மகராஜ், நேரில் சென்று சந்தித்து, நீண்டநேரம் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, “குல்தீப் சிங் நீண்டநாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்; இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிப்பதற்காக குல்தீப் சிங்கை சிறையில் சந்தித்தேன்” என்று சாக்ஷி மகராஜ் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...