எனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் - கார்கில் போர் வீரர் முகமது சனாவுல்லா!

ஜூன் 09, 2019 345

புதுடெல்லி (09 ஜூன் 2019): நான் இந்தியர் என்பதில் பெருமைப் படுவதாகவும், அதையே விரும்புவதாகவும் ஓய்வு பெற்ற கார்கில் போர் வீரர் முஹம்மது சனாவுல்லா தெரிவித்துள்ளார்.

கவுகாத்தி சத்கோன் பகுதியை சேர்ந்த முகமது சனாவுல்லா (57) என்பவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். கார்கில் போரில் கலந்து கொண்டவர். இதற்காக குடியரசுத் தலைவரிடம் விருது வாங்கியவர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அசாம் எல்லைப் பாதுகாப்பு போலீசில், துணை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இந்ந்நிலையில் இவரது குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாக, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டது. இவரது குடியுரிமை தொடர்பான வழக்கை, வெளிநாட்டினர் தீர்ப்பாயம் விசாரித்தது. இறுதியில், முகமது சனாவுல்லா வெளிநாட்டுக்காரர்தான் என தீர்ப்பாயம் உறுதி செய்து, தடுப்பு முகாமுக்கு அனுப்பியது. அவர் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தடுப்பு முகாமில் சனாவுல்லா அடைக்கப்பட்டதை எதிர்த்து கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் அவர் குடும்பத்தினர், மே மாதம் 23 ஆம் தேதி வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் கவுகாத்தி உயர்நீதிமன்றம் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள சனாவுல்லாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கபட்டார். விடுதலை செய்யப்பட்டபின், அவர் கூறுகையில்; "நான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 30 ஆண்டுகளாக பணியாற்றினேன். எனக்கு ஜாமீன் வழங்கியதற்கு உயர்நீதி மன்றத்தில் நன்றி, நான் ஒரு இந்தியராக இருக்கிறேன், இந்தியராக இருப்பேன், எனக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...