அமைச்சரவையில் அதிரடி - பட்டியலின பெண்ணுக்கு அமைச்சர் பதவி!

ஜூன் 09, 2019 370

அமராவதி (09 ஜூன் 2019): ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து அதிரடி காட்டி வருகிறார்.

இந்திய அரசியல் வரலாற்றில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த 5 துணை முதல்வர்களை நியமித்து, அனைவரின் கவனத்தையும் தம் பக்கம் திருப்பியிருக்கிறார்.

இந்நிலையில் ஆந்திராவில் உள்துறை அமைச்சராக பட்டிலினத்தைச் சேரந்த பெண்ணை நியமித்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. பட்டியலினத்திலிருந்து வரும் முதல் பெண் அமைச்சர் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளார் அந்தப் பெண்

`இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக ஆந்திராவை மாற்றிக்காட்டுவேன்’ என்று சொன்னது மட்டுமின்றி அதை நோக்கிய தனது பயணத்தைத் தொடர்கிறார். .

பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர், கபூ சமூகத்தினர். இந்த ஐந்து பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் ஜெகனின் ஐந்து துணை முதல்வர்கள். ஜெகன், தன் அமைச்சரவையில் 25 அமைச்சர்களை நியமித்துள்ளார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்றும், அதற்குப் பிறகு புதிய தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 25 அமைச்சர்களின் பெயர் பட்டியல் மற்றும் 5 துணை முதல்வர்களின் பெயர் பட்டியலையும், ஆளுநர் நரசிம்மனை சந்தித்து நேரில் வழங்கினார்.

ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் நேற்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் பட்டியிலனத்தைச்சேர்ந்த பெண் ஒருவருக்கு உள்துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிரதிபடு (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மெகதோட்டி சுஜரிதா. ஆந்திரா - தெலங்கனா பிரிவுக்குப்பிறகு, அம்மாநிலத்தில் உள்துறை அமைச்சராக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுகிறார் சுஜரிதா. ஜெகன் மோகன் ரெட்டியின் இந்தச் செயலுக்கான விதை, மறைந்த அவரின் தந்தை ராஜசேகர் ரெட்டி போட்டது. அவர் முதல்வராக இருக்கும்போது சபிதா இந்திரா ரெட்டி என்பவரை மாநிலத்தின் முதல் பெண் உள்துறை அமைச்சராக நியமித்தார்.

அவர் தற்போது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியில் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். ஜெகனின் அமைச்சரவையில் மொத்தம் மூன்று பெண்கள் இடம்பெற்றுள்ளனர். அமைச்சரவையில் 11 பேர் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்களும், 7 பேர் பின்தங்கிய வகுப்பினரும், 5 பேர் பட்டியலினத்தவரும், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் தலா ஒருவரையும் நியமித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...