காஷ்மீர் சிறுமி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு ஆயுள் தண்டனை!

ஜூன் 10, 2019 411

பதான்கோட் (10 ஜுன் 2019): காஷ்மீர் கத்வா பகுதி சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றவாளிகள் 6 பேரில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜம்மு மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது முஸ்லிம் சிறுமி, கடந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி கடத்தப்பட்டார். ஏழு நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்கப்பட்ட சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள், வழக்கை மூடிமறைக்க முயன்ற உள்ளூர் காவலர்கள் என ஏழு பேரின் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை ஜம்முவின் கத்துவா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வந்த மிரட்டல்கள் காரணமாக பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள பதான்கோட் நீதிமன்றம் 6 பேர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தீர்பளித்துள்ளது.

மேலும் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரமும் வெளியாகியுள்ளது. அதன்படி கத்வாவில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேரில் சஞ்சிராம், தீபக் கஜூரியா, பர்வேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மீதமுள்ள மூவரான திலக் ராஜ், உதவி காவல் ஆய்வாளர் ஆனந்த் தத்தா, சுரேந்தர் வர்மா ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மைனர் சிறுவன் விஷால் என்பவன் விடுதலை செய்யப்பட்டுள்ளான்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...