அமித்ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய மாணவி இடைநீக்கம்!

ஜூன் 11, 2019 368

அலகாபாத் (11 ஜூன் 2019): மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டிய அலகாபாத் பல்கலைக் கழக மாணவி நேகா யாதவை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி நேகா யாதவ். அரசியல் ஆர்வம் கொண்ட இவர், மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண போராட்டத்தில் ஈடுபடுபவர். உத்தர பிரதேச பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது தொடர்ந்து அடுக்குமுறையில் ஈடுபட்டதாக கூறி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் முன்நின்று நடத்தியவர்.

இதனிடைய கடந்த ஆட்சியின் போது, பா.ஜ.க அரசு மாணவர்களுக்கான நலத்திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறி கடந்த 2018-ஆம் ஆண்டு பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவின் கான்வாய் வாகனத்தை மறித்து கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.

அந்தப் போராட்டத்தின் போது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மோடி, அமித் ஷா ஆகியோரைக் கண்டித்து கோஷங்களையும் எழுப்பினார். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவரை காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, நேகா மற்றும் அவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடப்பு கல்வியாண்டு முடிந்ததும் உடனடியாக பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனைக் கண்டித்து மீண்டும் நேகா மாணவ - மாணவியரைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் மாணவி நேகாவை இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், உடனடியாக விடுதியிலிருந்து வெளியேறவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மாணவர்கள் புகார் அளித்ததன் பேரில் நடைபெற்றதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இவ்விவகாரத்தை நீதிமன்றம் கொண்டு செல்லவுள்ளதாகவும் மாணவி நேகா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...