வன்முறை கும்பலிடமிருந்து முஸ்லிம் குடும்பத்தினரை காப்பாற்றிய இந்து பெண்!

ஜூன் 11, 2019 888

அலிகார் (11 ஜூன் 2019): உத்திர பிரதேசம் அலிகாரில் வன்முறை கும்பலிடமிருந்து முஸ்லிம் குடும்பத்தினரை இந்து பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

அலிகாரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 2 வயது சிறுமி ஜாகித் என்பவனால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப் பட்டார். இதனை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் அலிகார் பகுதியை சேர்ந்த அப்பாஸி என்பவரின் முஸ்லிம் குடும்பத்தினர் அலிகாரிலிருந்து ஹரியானாவிற்கு நிகழ்ச்சி ஒன்றிற்காக வேனில் புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் குடும்ப நண்பரான பூஜா சவ்ஹான் என்ற 24 வயது பெண்ணும் சென்றுள்ளார்.

வேன் ஜத்தாரி பகுதியிலிருந்து 40 கி.மீ தொலைவில் சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனங்களில் வந்த கும்பல் வேனை வழிமறித்து சரமாரியாக தாக்கியது. இதில் வேன் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மேலும் அதில் உள்ள அனைவரையும் அந்த வன்முறை கும்பல் தாக்க முற்பட்டது. அப்போது வன்முறை கும்பலை இடைமறித்த பூஜா சவ்ஹான், அந்த கும்பலை கடுமையாக சாடினார்.

மேலும் சிறுமி படுகொலை செய்யப் பட்டதால் எல்லோரும் வருத்தத்துடனேயே உள்ளோம், இதில் யாரும் மகிழ்ச்சீயாக இல்லை, அதற்காக அப்பாவிகளை தாக்குவீர்களா? என்று பூஜா சவ்ஹான் அந்த வன்முறை கும்பலிடம் வாதிட்டார். இதனை அடுத்தே அந்த கும்பல் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளது.

இதற்கிடையே இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப் பட்டது. மேலும் காயம் அடைந்தவர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பாஸி, "பூஜா சவ்ஹான் என் வீட்டில் ஒருவர், என் மகளைப் போன்றவர். அவர் இல்லை என்றால் அந்த கும்பலால் நாங்கள் கொல்லப் பட்டிருப்போம்" என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...