ஐந்து கோடி சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை - மத்திய அரசு அறிவிப்பு!

ஜூன் 12, 2019 435

புதுடெல்லி (12 ஜூன் 2019): சுமார் 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவிக்கையில், "மத வாதத்தை அகற்றி அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை சாத்தியமாக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு.

நாட்டில் கல்வி கட்டமைப்பில்லாத பகுதிகளில் ஜன் விகாஸ் கார்யக்ரம் திட்டத்தின் கீழ், பள்ளி, கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப உண்டு உறைவிட பள்ளிகள், பொது சேவை மையங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன நாடு முழுவதிலும் உள்ள மதரசாக்களில் இந்தி, ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களையும் கற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மதரசாவில் கல்வி கற்கும் மாணவர்கள் பொது வெளியில் செயல்பட வாய்ப்பு ஏற்படும். மேலும் மத்திய மாநில அரசுகள் நடத்தும் வேலைவாய்ப்பு தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் , பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின பிரிவை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. மேலும் பாதியில் படிப்பை நிறுத்திய சிறுபான்மையின மாணவர்களுக்கு, மீண்டும் கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு, அதன் மூலம் அவர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.

நாடு முழுவதும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி கல்வி கற்பதை ஊக்குவிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக சிறுபான்மையின சமூக பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் சுமார் 5 கோடி சிறுபான்மை மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்க தீவிர ஏற்பாடுகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...