புயலிலிருந்து தப்பித்தது குஜராத்!

ஜூன் 13, 2019 189

புதுடெல்லி (13 ஜூன் 2019): அரபிக் கடலில் உருவான வாயு புயல் குஜராத்தை தாக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி தீவிரமடைந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்தது. இது மேலும் வலுப்பெற்று சூறாவளிப் புயலாக உருமாறி இன்று காலையில் குஜராத் மாநிலம் துவார்கா மற்றும் வேரவல் இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை குஜராத் மாநில அரசு மேற்கொண்டது. குஜராத் கடலோரப் பகுதிகளில் உள்ள 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அகமதாபாத்தில் இருந்து போர்பந்தர், டையூ, காண்ட்லா, முந்த்ரா மற்றும் பாவ்நகர் பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்று காலை புயல் செல்லும் பாதையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. புயலின் மையமானது வடமேற்கு திசையில் நகரத்தொடங்கியது.

இதனால், புயல் குஜராத்தை தாக்க வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனினும், கடலோரப்பகுதிகளில் புயல் காற்றுடன் கனமழை பெய்யலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...