முடிவுக்கு வந்த மருத்துவர்கள் போராட்டம்!

ஜூன் 17, 2019 252

கொல்கத்தா (17 ஜூன் 2019): டாக்டர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மேற்கு வங்காளம் மாநிலத்தில் டாக்டர்கள் நடத்திய ஒருவார வேலைநிறுத்த போராட்டம் மம்தாவுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவுக்கு வந்தது.

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் அங்கு பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை தாக்கினர். இதை கண்டித்து 11-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களுக்கு ஆதரவாகவும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் கடந்த 14-ந் தேதி முதல் 3 நாட்கள் போராட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 17-ந் தேதி (இன்று) வேலைநிறுத்தம் நடத்தவும் இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதன்படி இன்று டாக்டர்களின் வேலைநிறுத்தம் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதன்மூலம் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசியம் இல்லாத பணிகளை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் நாடு முழுவதும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆனால் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைகள் வழக்கம் போல நடைபெறுகின்றன. இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு வரும்படி என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இதைதொடர்ந்து, இன்று தலைமை செயலகத்தில் டாக்டர்களுடன் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பணியிடங்களில் தங்களது பாதுகாப்புக்கு அரசு உத்திரவாதம் வழங்க வேண்டும் என்று மம்தாவிடம் டாக்டர்கள் வலியுறுத்தினர். பணியின்போது தங்களுக்கு உள்ள குறைபாடுகளை பற்றியும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் குறைதீர்ப்பு மையங்கள் அமைக்கவும், காவல்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியை குறைதீர்ப்பு நடுவராக நியமிக்கவும் மம்தா ஒப்புதல் அளித்தார்.

இதைதொடர்ந்து, ஒருவாரமாக நடத்திவந்த வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவதாக பயிற்சி டாக்டர்கள் சங்க பிரதிநிதிகள் இன்று மாலை அறிவித்தனர்.

இதன்மூலம் நாடு முழுவதும் நடைபெற்றுவரும் டாக்டர்களின் வேலைநிறுத்த போராட்டமும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...