சூடுபிடிக்கும் உன்னாவ் சிறுமி விவகாரம் - சிறுமியை டெல்லி கொண்டுவர உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஆகஸ்ட் 01, 2019 490

புதுடெல்லி (01 ஆக 2019): உத்திர பிரதேசம் உன்னாவ் சிறுமி விவகாரம் தேசிய அளவில் சூடுபிடித்துள்ளது. உபியில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை டெல்லிக்கு சிகிச்சைக்காக கொண்டு வர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17- வயது சிறுமி, கடந்த 2017-ம் ஆண்டு, தன் பகுதியில் உள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரிடம் வேலை கேட்டுச் சென்றபோது, அவர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் சிறுமியை வன்புணர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சிறுமி. இது தொடர்பான விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியின் தந்தை, மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டு முன்பு, பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தாயும் தீ குளித்து தற்கொலை செய்ய முயன்றபோதுதான், இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. பின்னர், குல்தீப் சிங் கைது செய்யப்பட்டு ஒரு வருடமாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உன்னாவ் சிறுமி பயணித்த காரின்மீது லாரி மோதியது. இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு, தற்போது அவர் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சிறுமியுடன் பயணித்த அவரின் இரண்டு பெண் உறவினர்கள் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் உன்னாவ் வழக்கு அதிக கவனம் பெற்றது. சிறுமி, காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு, சிறுமியின் உறவினர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் கொலை மிரட்டல்களையும் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ அதிகாரிகள் பிற்பகல் 12 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் எனத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார். அதற்குப் பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ‘ சிபிஐ அதிகாரிகளை நேரில் ஆஜராகும்படி தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதனால், அவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவளிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.

அவரின் வேண்டுகோளை மறுத்த நீதிபதி, ‘ சிபிஐ அதிகாரிகளிடம் நிச்சயமாகத் தனி விமானம் இருக்கும். அதில் அவர்களை அழைத்துவாருங்கள் அல்லது உங்களிடம் இருக்கும் தனி விமானத்தில் அழைத்துவாருங்கள்’ எனக் கூறினார்.

அதனை தொடரந்து ஒத்தி வைக்கப் பட்ட விசாரணை மீண்டும் தொடங்கியது அப்போது சிறுமியின் உறவினர்கள் அனுமதியுடன் சிறுமியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றிய நீதிபதி, 45 தினங்களுக்குள் இவ்வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...