அறிவுரை கூற வந்த போலீசாருக்கு தனது கேள்விகளால் பாடம் நடத்திய மாணவி!

ஆகஸ்ட் 01, 2019 375

லக்னோ (01 ஆக 2019): பெண் பாதுகாப்பு குறித்து பாடமெடுக்க வந்த போலீசாருக்கு உன்னாவோ சம்பவத்தை முன்வைத்து கேள்வி கேட்டு துளைத்தெடுத்த பள்ளி மாணவியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்திர பிரதேசம் உன்னாவோ 17 வயது சிறுமி வழக்கு தற்போது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கை ஒரு வாரத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியில், விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காவல் துறை உயர் அதிகார்கள், மாணவிகளிடையே போராடுவது தொடர்பாகவும், போராடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அறிவுறுத்தல்களை கொடுத்தனர்.

காவல் துறையினரின் அந்த பேச்சைக் கேட்ட மாணவி முனீபா கித்வை என்பவர், உன்னாவ் சிறுமிக்கு நடந்த கொடுமையை சுட்டிக்காட்டி சரமாரிக் கேள்விகளை எழுப்பினார். மாணவியின் அந்த பேச்சு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கேள்வி எழுப்பிய மாணவி பேசியதாவது ” 18 வயதுடைய பெண்ணை பா.ஜ.க. எம்.எல்.ஏ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு அப்பெண்ணின் தந்தை உயிரிழந்திருக்கிறார். அவரது மரணம் விபத்தினால் ஏற்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். பாதிக்கப்பட்ட பெண் தனது தாய், உறவினர், வழக்கறிஞருடன் காரில் சென்றபோது லாரி மோதி விபத்துக்குள்ளாகினர்.

அதில், உடன் பயணம் செய்த அவரது உறவினர்கள் மரணித்திருக்கிறார்கள். கார் மீது மோதிய லாரியின் நம்பர் ப்ளேட் கருப்பு மையால் மறைக்கப்பட்டுள்ளது.” என்றவுடன் சக மாணவர்கள் பலத்த கரகோஷங்களை எழுப்பினர்.

மேலும் போலீசையும் அரசையும் விளாசிய அவர், ” ஒரு சாதாரண மனிதனுக்கு எதிராக எங்களால் போராட முடியும். ஆனால், பணபலம், அதிகார பலம் படைத்த ஒரு அரசியல்வாதியை எதிர்த்து எங்களால் எப்படி போராட முடியும் என்று நினைக்கிறீர்கள்?. அப்படி எதிர்த்து போராடினால் எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்கு யார் உத்தரவாதம். அவ்வாறு அரசியல்வாதிகளுக்கு எதிராக நாங்கள் போராடினாலும் கூட எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை, அப்படியே நடவடிக்கை எடுத்தாலும் அதனால் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. ஏராளமான நிர்பயாக்களை பார்த்திருக்கிறோம், எங்களால் போராட முடியும். ஆனால் அதற்கான நீதி கிடைக்குமா? அவ்வாறு போராடும் எனக்கு பாதுகாப்பு கிடைக்குமா?” என சரமாரியாக கேள்விக்கணைகளை முன்வைத்தார் அந்த பள்ளி மாணவி.

மாணவிகளுக்கு அறிவுரை கூற வந்த போலீசாருக்கு ஒரு மாணவியே அறிவுரை வழங்கியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...