உன்னாவ் சிறுமியின் தங்கைக்கும் நடந்த பாலியல் கொடூரம் - அடுத்த அதிர்ச்சி சம்பவம்!

ஆகஸ்ட் 02, 2019 390

புதுடெல்லி (02 ஆக 2019): உன்னாவ் சிறுமி பாலியல் கொடுமை விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கையையும் பாஜக எம்.எல்.ஏ-வின் ஆட்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக அப்பெண்ணின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக சாட்சியம் அளிப்பதற்காக காவல் நிலையம் சென்ற அப்பெண்ணின் தந்தையும், சாட்சி ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாலியல் புகாரளித்த பெண் கடந்த வாரம் தனது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ரேபரேலி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது லாரி மோதியதில் விபத்துக்குள்ளானது. இதில் அப்பெண்ணின் உறவினர்கள் இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். புகார் கூறிய பெண்ணுக்கும், வழக்கறிஞருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இச்சம்பவம் விபத்தல்ல திட்டமிட்ட கொலை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை அடுத்து உன்னாவ் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் உன்னாவ் சம்பவம் தொடர்பான வழக்குகளைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது உன்னாவ் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர். மேலும், 45 நாட்களில் இந்த வழக்கு முடித்து வைக்கப் பட வேண்டும் என்றும் உத்தரவிட்டப் பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கையும் பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் ஆட்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக, அப்பெண்ணின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். பெண்கள் உரிமைக் குழு உறுப்பினர்களிடம் பேசிய அப்பெண்ணின் தாயார், வழக்கை திரும்பப் பெறுமாறு அச்சுறுத்துவதற்காக வந்தபோது குண்டர்கள் தனது இளைய மகளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கூறினார்.

உன்னாவ் விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...