உமர் அப்துல்லா, மெகபூபா முக்தி ஆகியோர் நள்ளிரவில் கைது - பதபதைக்கும் காஷ்மீர்!

ஆகஸ்ட் 05, 2019 325

ஜம்மு (05 ஆக 2019): காஷ்மீரில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையில் காஷ்மீர் தலைவர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். கல்லூரிகளில் இருந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து அம்மாநிலத்தில் படை பலம் அதிகரிக்கப்பட்டது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காஷ்மீர் நிலவரம் குறித்து டெல்லியில் உள்துறை செயலாளர் ராஜீவ் கவ்பா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசித்தார்.

இதற்கிடையே, ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுக்கட்சி தலைவர் பரூக் அப்பதுல்லா இல்லத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, காஷ்மீரில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் செயல்களில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

ஜம்மு காஷ்மீரின் அடையாளம், தன்னாட்சி, சிறப்பு அந்தஸ்திற்கு எதிரான தாக்குதல்களை முறியடிக்க அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது என கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம். இந்த பிரச்னையில் குடியரசு தலைவரும், பிரதமரும் தலையிட்டு உரிய தீர்வுகாண வலியுறுத்துவது என அனைத்து கட்சிகளும் தீர்மானித்துள்ளன.

காஷ்மீரில் பதற்றம் அதிகரித்தும் வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் மக்கள் கான்ப்ரன்ஸ் கட்சி நிர்வாகி சஜத் லோன் ஆகியோர் நள்ளிரவில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள உமர் அப்துல்லா, மாநில நலனில் உண்மையான அக்கறையில்லாதவர்கள் தான் வன்முறையை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்று குறிப்பிடுட்ள்ளார். இந்த சூழ்நிலையிலும், தனது நம்பிக்கையை கைவிட வில்லை என்றும் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

காஷ்மீர் மக்களின் குரல் நசுக்கப்படுவதை உலகமே பார்த்துக் கொண்டிருப்பதாகவும், இந்தியாவே விழித்தெழு என்றும் மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீட்டுக் காவல் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், எந்த தவறும் செய்யாத தலைவர்களை நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பது ஏன் என கேள்வியெழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...