பெஹ்லுகானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் பிரியங்கா காந்தி மீது வழக்கு!

ஆகஸ்ட் 17, 2019 499

புதுடெல்லி (17 ஆக 2019): பசு பயங்கரவாத கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட பெஹ்லு கான் வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் பெஹ்லு கான் என்பவர் தமது மகன்களுடன் ஜெய்பூர் கால்நடை சந்தையில் வாங்கிய மாடுகளை, சொந்த மாநிலமான அரியானாவிற்கு வாகனத்தில் வைத்து கொண்டு சென்றார்.

டெல்லி-ஆல்வார் நெடுஞ்சாலையில் ராஜஸ்தானின் பெஹ்ரர் அருகே, பசுபயங்கரவாத கும்பல் அவரது வாகனத்தை வழி மறித்தனர். வாகனத்தில் இருந்த பெஹ்லு கான் மற்றும் அவரது இரு மகன்களை மிக கொடூரமாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த பெஹ்லு கான் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெஹ்லு கான் மற்றம் அவரது மகன்கள் சரமாரியாக தாக்கப்படும் காட்சி தொடர்பான வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த படுகொலை தொடர்பான வழக்கு ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆறு பேர் மீது குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. இந்நிலையில் பெஹ்லுகானை கொலை செய்ததற்கான ஆதாரங்கள் சரிவர இல்லாததால் குற்றவாளிகள் ஆறு பேரையும் விடுதலை செய்வதாக ராஜஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்ட பிரியங்கா, “இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் அரசு இதில் தலையிட்டு நீதி கிடைக்க செய்யும் என நம்புகிறேன்” என கருத்து பதிவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து சுதிர் ஓஜா என்பவர் பிரியங்கா மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.இது பற்றி மனுதாரரின் வக்கீல் கூறுகையில், மத கலவரத்தை தூண்டும் வகையிலும், கோர்ட்டின் தீர்ப்பை விமர்சிக்கும் வகையிலும் கருத்து பதிவிட்டதன் அடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் பிரியங்கா மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீது வரும் ஆகஸ்ட் 26 அன்று விசாரணை நடைபெற உள்ளது என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...