இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை - நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்!

ஆகஸ்ட் 20, 2019 342

புதுடெல்லி (20 ஆக 2019): நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநரான அமர்த்தியா சென், மத்திய அரசு, காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை கடுமையாக எதிர்த்துள்ளார்.

ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இந்த மாதத் தொடக்கத்தில் ரத்து செய்தது மத்திய அரசு. மேலும் ஜம்மூ காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து உத்தரவிட்டது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர், இந்த முடிவை வரவேற்றனர். இந்த நடவடிக்கையின் மூலம் ஜம்மூ காஷ்மீருக்கென்று இருந்த தனி சட்ட சாசனம், தனி மாநிலக் கொடி, தனி உரிமைகள் நீக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அமலில் இருக்கும் சட்ட சாசனமே, இனி ஜம்மூ காஷ்மீரிலும் செல்லும்.

இது குறித்து மேலும் பேசிய சென், “இந்த விவகாரத்தைப் பற்றி காஷ்மீர் மக்கள்தான் முடிவெடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் அது அவர்களுக்குச் சொந்தமான நிலப் பகுதி. காஷ்மீரில் இருக்கும் மக்கள் பிரநிதிகளையும் அரசியல் கட்சித் தலைவர்களையும் சிறை வைத்துவிட்டு உண்மையான நீதியை உங்களால் நிலைநாட்ட முடியாது. அம்மாநிலத்தை ஆண்ட முன்னாள் முதல்வர்களைக் கூட நீங்கள் சிறை வைத்துள்ளீர்கள். ஜனநாயகத்தை வெற்றிகரமாக வைத்திருக்கும் காரணிகளை நீங்கள் நசுக்குகிறீர்கள்.” என்றார்.

“பெரும்பான்மையினர் ஆட்சி செய்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணமாக காஷ்மீர் விவகாரம் மாறியுள்ளது. ஜனநாயகம் இல்லாமல் காஷ்மீர் விவகாரத்தில் சுமூக தீர்வு இருக்க வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளில் பல்வேறு ஓட்டைகள் இருப்பதாக சொல்லும் அமர்த்தியா சென், “ஒரு இந்தியனாக இந்த முடிவு எனக்குப் பெருமை அளிக்கவில்லை." என்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...