தொடரும் அரசு மருத்துவமனை அவலம் - நடைபாதையில் நடந்த பிரசவம்!

ஆகஸ்ட் 21, 2019 218

பரூகாபாத் (21 ஆக 2019): உத்திர பிரதேசத்தில் மருத்துவமனை இடம் அளிக்காததால் பிரசவ வலியால் துடித்த பெண் நடை பாதையிலேயே பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஃபரூகாபாத்தில் அமைந்துள்ளது ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனை. கடந்த ஞாயிறன்று அந்த மருத்துவமனைக்கு பிரசவ வலியில் துடித்த சஞ்சோ என்ற பெண்ணை உறவினர்கள் அழைத்து வந்துள்ளனர்.

மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லை எனக் கூறி அவரை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துள்ளனர் மருத்துவமனை ஊழியர்கள். இதையடுத்து, மிகுந்த வலியால் துடித்த அப்பெண்ணை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இயலாததால் நடைபாதையிலேயே பிரசவம் நடைபெற்றுள்ளது.

நடைபாதையிலேயே பிரசவம் நடைபெற்ற காட்சியை அங்கிருந்த ஒருவர் படம்பிடித்து உள்ளூர் நிருபர்களுக்கு பகிர்ந்ததையடுத்து, இத்தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவமனை நடைபாதையில் ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி அப்பெண் குழந்தையைப் பிரசவிக்கும் காட்சி காண்போரை கலங்கச் செய்துள்ளது.

ஃபரூகாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரே அரசு சிறப்பு மருத்துவமனையான ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனையிலேயே இத்தகைய கொடுமை நிகழ்ந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...