ப சிதம்பரம் தேடப்படும் நபராக அறிவித்தது அமலாக்கத் துறை!

ஆகஸ்ட் 21, 2019 173

புதுடெல்லி (21 ஆக 2019): முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையினர் தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருடைய மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனக்கூறியது.

இந் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாரான சிபிஐ அதிகாரிகள், நேற்று மாலை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர் இல்லை. மேலும் அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் 2 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரம் வீட்டு கதவில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

இன்று காலை மீண்டும் ப. சிதம்பரம் இல்லத்திற்கு 6 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழு சென்றது. ஆனால் ப.சிதம்பரம் அவரது இல்லத்தில் இல்லாத காரணத்தால் மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...