வெள்ள நிவாரணத்திற்கு தான் காதில் அணிந்திருந்த தங்கத்தை வழங்கி கேரள முதல்வரை நெகிழ வைத்த சிறுமி!

ஆகஸ்ட் 26, 2019 340

எர்ணாகுளம் (26 ஆக 2019): கேரளாவில் ஏற்பட்ட வெள்ள நிவாரணத்திற்கு தான் சேமித்த பணத்தையும் தன் அணிந்திருந்த தங்கத்தையும் உதவி கேரள முதல்வரை நெகிழ வைத்துள்ளார் நான்காம் வகுப்பு பயிலும் மாணவி.

கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர். லட்சக் கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நாடு முழுவதிலும் இருந்து நிவாரணப் பொருள்களும் நிதியுதவிகளும் குவிந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சி.பி.எம் கட்சித் தலைவர் லாரன்ஸின் 90-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நேற்று எர்ணாகுளம் டவுன் ஹாலில் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக முதல்வர் பினராயி விஜயன் வந்துள்ளார். இந்தச் செய்தியை அறிந்த லியானா தேஜுஸ் என்ற சிறுமி, தன்னையும் அங்கு அழைத்துச்செல்லும்படி தந்தையிடம் கேட்டு, தான் சேர்த்துவைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அதன்பிறகு நடந்த சம்பவம்தான் அதிக பாராட்டைப் பெற்றுள்ளது

“கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தின்போது லியானா, தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கினார். அதேபோல், இந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் எனக் கூறிவந்தாள். முதல்வர் எர்ணாகுளம் வந்துள்ளார் என்ற செய்தி அறிந்ததும் தன்னையும் அங்கே அழைத்துச்செல்லும்படி கேட்டாள்.

அவளின் விருப்பப்படி, சேர்த்துவைத்த பணத்தை எடுத்துக்கொண்டு நாங்கள் எர்ணாகுளம் வந்தோம். அதற்குள் முதல்வர் விழாவை முடித்துக்கொண்டு புறப்படத் தயாராக இருந்தார். அவரைப் பார்த்ததும் அருகில் ஓடிய லியானா, தான் சேர்த்துவைத்திருந்த பணத்தை நேரடியாக முதல்வரிடம் வழங்கினார்” என லியானாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

அந்தச் சிறுமி முதல்வரிடம் எவ்வளவு பணம் வழங்கினார் என்பது தெரியவில்லை. ஆனால், பணம் வழங்கிய பிறகு இரண்டு அடி பின்னால் வந்த சிறுமி, என்ன நினைத்தார் எனத் தெரியவில்லை. மீண்டும் முதல்வர் கார் அருகில் சென்று, ‘ வெயிட் பண்ணுங்க அங்கிள், இதையும் வாங்கிக்கோங்க’ எனக் கூறி, தான் காதில் அணிந்திருந்த தங்கக் காதணியைக் கழற்றி முதல்வரின் கையில் கொடுத்துள்ளார். சிறுமியின் செயலால் வியந்த முதல்வர், லியானாவைப் பாராட்டி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

லாரன்ஸின் 90-வது பிறந்தநாள் விழாவை முடித்துவிட்டு கிளம்பும் வேளையில், ஒரு சிறுமி என்னை நோக்கி ஓடி வந்து, தான் சேர்த்துவைத்திருந்த பணத்தை என்னிடம் அளித்தார். அதை வாங்கிக்கொண்டு நான் புறப்படத் தயாரானபோது, இதையும் எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறி, அவரது காதணிகளை என்னிடம் அளித்தார் . இந்தச் சிறுமியின் செயலைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. இவரைப் போன்ற சிறுவர்களைப் பார்ப்பது மிகவும் பெருமையாக உள்ளது. இவர்கள் தான் புதிய கேரளாவின் சிறந்த சொத்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...