பாஜக தலைவர்களின் தொடர் மரணத்திற்கு காரணம் இதுதானாம் - பாஜக எம்பியின் பகீர் கருத்து!

ஆகஸ்ட் 26, 2019 510

போபால் (26 ஆக 2019): பாஜகவில் சமீபத்தில் தலைவர்கள் மறைவுக்கு எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை ஏவி விட்டதே காரணம் என்று தான் நம்புவதாக பாஜக எம்.பி பிரக்யா சிங் தாகூர் பேட்டியளித்துள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஜாமினில் வெளிவந்து போபாலில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரக்யா சிங் தாகூர், காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே தேசபக்தர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இந்நிலையில், பாஜகவின் தலைவர்கள் தொடர்ந்து உடல்நலக்குறைவால் மரணமடைவது குறித்து பகீர் கருத்து ஒன்றை பிரக்யா கூறியுள்ளார்.

போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தல் சமயத்தில் மகாராஜ்ஜி என்னிடம் வந்து, இது மிகவும் மோசமான நேரம். உங்கள் கட்சி மற்றும் தலைவர்களுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துகின்றன. இந்த சூழலில் நீங்கள் கவனமாக இருங்கள் என என்னிடம் கூறினார். நான் அதன் பிறகு அதை மறந்து விட்டேன். இப்போது நடப்பதை எல்லாம் பார்க்கும் போது அவர் கூறி உண்மை என்றே தோன்றுகிறது.

கட்சித் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்து வருகின்றனர். மகாராஜ் ஜி சொன்னதை இப்போது நினைத்து பார்க்கிறேன். நீங்கள் நம்புவீர்களா இல்லையா என எனக்கு தெரியவில்லை. இது உண்மை என்றே தோன்றுகிறது” என்றார்.

பாஜகவின் வாஜ்பாய், மனோகர் பாரிக்கர், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் உடல்நலக்குறைவால் சமீபத்திய ஆண்டுகளில் காலமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...