ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு அளிக்கும் ஒரு லட்சத்து 76,000 கோடி - பின்னணி இதுதான்!

ஆகஸ்ட் 27, 2019 349

புதுடெல்லி (27 ஆக 2019): ரிசர்வ் வங்கியின் உபரிநிதியில் இருந்து ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வாங்கி உபரி தொகையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. மத்திய அரசின் இந்த கோரிக்கையால் எழுந்த சர்ச்சைக்கு பிறகு அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் செய்தார். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி எவ்வளவு உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்கலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் மத்திய அரசு சார்பில் மத்திய நிதித்ததுறை செயலர் ராஜீவ்குமார், ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்கள் ராகேஷ் மோகன், விஷ்வநாதன், பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திர கார்க், ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் பாரத் ஜோஷி மற்றும் சுதிர் மன்கட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழு தனது அறிக்கையை கடந்த 14-ம் தேதி ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்த நிலையில், அந்த அறிக்கை குறித்து முடிவு செய்வதற்காக ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 2018-19-ம் நிதியாண்டின் உபரி நிதியிலிருந்து 1,76,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழக்கை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்கவும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், பொருளாதார நெருக்கடி காலங்களில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும், உபரிநிதியை ஒரு நாட்டின் மத்திய வங்கிகள் கையிருப்பாக வைத்திருப்பது வழக்கம். ஒவ்வொரு நாட்டிலும் இந்த உபரி தொகைதான் பொருளாதார சமநிலைக்கான முக்கிய காரணியாக திகழ்கிறது. அப்படி இருக்கும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் 14 சதவீதம் மட்டுமே உபரி நிதியை இருப்பு வைத்துள்ளதாகவும், ஆனால் இந்தியாவிடம் 28 சதவீதம் உபரி நிதி கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உபரி நிதி அதிகமாக இருப்பதால் அதனை மத்திய அரசுக்கு கொடுப்பதற்கு ரிசர்வ் வாங்கி இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...