இந்திய பொருளாதாரம் குறித்து வங்கி ஊழியர்கள் சங்கம்அதிர்ச்சி தகவல்!

ஆகஸ்ட் 28, 2019 311

சென்னை (28 ஆக 2019): ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் ரூ.1.76 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வழங்கப்படுவதால் இந்திய பொருளாதாரத்தில் மேலும் நெருக்கடி ஏற்படும் என்று வங்கி ஊழியர் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியில் ரூ.1.76 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு அரசியல் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவிக்கையில், "ரிசர்வ் வங்கி, இந்திய பொருளாதார துறை ஸ்திரத்தன்மையை பலப்படுத்தவும், ரூபாயின் மதிப்பை சமன்படுத்தவும் முழு அதிகாரத்தோடு ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசினால் அமைக்கப்பட்ட நிறுவனமாக இருந்தாலும், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையில் மத்திய அரசு நேரடையாக தலையிடக்கூடாது என்பது அடிப்படை விதிமுறை.

ஆனால் இன்றைக்கு இதை மீறி அரசாங்கத்தினுடைய நிதி பற்றாக்குறையை சரி செய்ய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய உபரி தொகையை அரசு கணக்கிற்கு மாற்றி இருப்பது தவறான போக்காகும். ரிசர்வ் வங்கியின் உபரி என்பது தங்கம் இருப்பின் மதிப்பீடு, டாலர் கரன்சியின் மதிப்பீடு, அரசின் கடன் பத்திரங்களில் செய்துள்ள முதலீடு இவற்றின் மதிப்பை பொறுத்தே அமைகின்றது.

எனவே இந்த உபரி என்பது மறைமுக உபரியே தவிர நேர்முக உபரியல்ல. எந்த நேரத்திலும் தங்கம் விலையில் சரிவு ஏற்படும் போதோ அல்லது டாலரின் மதிப்பு குறையும் போதே அல்லது அரசின் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் குறையும் போதோ இந்த உபரி தொகை அதற்கு தகுந்தாற்போல் மாறி விடும்.

எனவே பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இந்த உபரி தொகை உதவும். இந்த உபரி தொகையை அரசு இன்றைக்கு எடுத்து கொண்டால் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது ரிசர்வ் வங்கியால் அந்த நெருக்கடியை சமாளிக்க முடியாத இயலாமை ஏற்படும்.

ஏற்கனவே இந்திய பொருளாதாரத்தினுடய அடிப்படை ஆட்டம் கண்டுள்ள பின்னணியில் இந்த முடிவு பாதகமானது. இந்திய பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

காரணம் இந்த ரூ. 1,76,000 லட்சம் கோடி உபரி தொகை இந்திய பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு உதவுவதற்கு பதிலாக அன்றாட செலவினங்களுக்கு உபயோகப்படுத்தப்பட்டு ஆபத்து காலத்தில் உதவாமல் போகும்.

எந்த நோக்கத்திற்காக இந்த உபரி தொகை சேர்த்து வைக்கப்படுகின்றதோ அந்த குறிக்கோள் முறியடிக்கப்படுகின்றது. எனவே அரசு இந்த முடிவை மாற்றிக் கொண்டு ரிசர்வ் வங்கியின் தனி அதிகாரத்தில் தலையிடக்கூடாது.

பொருளாதார பாதுகாப்பிற்காக பயன்பட வேண்டிய உபரி தொகையை அரசாங்கத்துடைய அன்றாட பற்றாக்குறைக்கு பயன்படுத்தக் கூடாது." என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...