மன்மோகன் சிங் பேச்சை கொஞ்சம் கேளுங்கள் - பாஜகவுக்கு சிவசேனா அட்வைஸ்!

செப்டம்பர் 04, 2019 245

புதுடெல்லி (04 செப் 2019): நாட்டின் பொருளாதார விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள் என்று பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா கட்சி, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

''பொருளாதார மந்தநிலை காரணமாக, நாட்டில் மிகப்பெரிய பொருளதாரச் சிக்கல் வரப்போகிறது என்று சில ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பிரதமர் மனமோகன் சிங் எச்சரித்து இருந்தார். மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரத்தையும், பொருளாதார சூழலையும் நன்கு அறிந்து, எந்தவிதமான வெறுப்பு, விருப்பின்றித்தான் பேசுகிறார்.

தேசத்தின் பொருளாதாரம் சரியான பாதையில் செல்லவில்லை, மோசமாக இருக்கிறது என்று கூறும் மன்மோகன் சிங்கின் வார்த்தை மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் மத்திய அரசு மன்மோகன் சிங் என்ன எச்சரிக்கை விடுக்கிறாரோ, என்ன அறிவுரை கூறுகிறாரோ அதைக் காது கொடுத்து கவனிக்க வேண்டும்.

பொருளாதாரம் உற்சாகம் இழந்து மந்தநிலையில் இருக்கிறது. காஷ்மீர் விவகாரமும், பொருளாதார மந்தநிலையும் வெவ்வேறான விஷயங்கள். ஆளும் அரசுக்கு ஆதரவாக இருப்பவர்கள் கூட பொருளாதார வளர்ச்சிக் குறைவு என்று சொல்பவர்களுக்கு எதிராகப் பேசலாம். ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வார்த்தைகள் அனைத்தும் உண்மையைச் சொல்லும் வெடிகுண்டுகள்.

மன்மோகன் சிங் போன்ற தேர்ந்த பொருளாதார வல்லுநர், பொருளாதார மந்தநிலையில் அரசியல் செய்யமாட்டார்கள். பொருளாதாரச் சூழலைச் சரிசெய்வதற்கான ஆலோசனையை வழங்குவார்கள். தேசத்தின் நலன் கருதி மன்மோகன் சிங் கூறும் ஆலோசனைகளை, அறிவுரைகளை மத்திய அரசு கேட்க வேண்டும்.

தேசத்தின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மன்மோகன் சிங் தொடர்பில் இருந்து வருகிறார். நாட்டின் பொருளாதாரம் குறித்துப் பேசுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டு மன்மோகன் சிங் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், ரெயின்கோட் அணிந்துகொண்டு மன்மோகன் சிங் குளிக்கிறார் என்றார். ஆனால், எங்களுக்கு மன்மோகன் சிங் மீது எந்த வருத்தமும் இல்லை. மன்மோகன் சிங் பொருளாதாரத்தை நன்கு அறிந்தவர். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தபோது, அவரின் கடினமான முயற்சியால், மீண்டும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தவர்.

பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டி வரியும் பொருளாதாரச் சரிவுக்கு முக்கியக் காரணம். பண மதிப்பிழப்பு தோல்வி அடைந்துவிட்டது. ஜிஎஸ்டி வரி தொழில்துறையினரையும், வர்த்தகர்களையும் கழுத்தை இறுக்கிப் பிடித்து, தொழில்துறையை அச்சுறுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாஜக தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும், குதிரை பேரத்தில் மட்டுமே கவனமாக இருந்ததால், பொருளாதாரம் உற்சாகம் இழந்துவிட்டது. ஆதலால், இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் மன்மோகன் சிங் பேச்சை அரசு கேட்க வேண்டும்''.

இவ்வாறு சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.

பாஜகவின் நண்பனான சிவசேனாவே இவ்வாறு கூறியிருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...