இக்பால் அன்சாரி தாக்கப்பட்டது குறித்து விசாரணை தேவை - உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை!

செப்டம்பர் 05, 2019 346

புதுடெல்லி (05 செப் 2019): பாபர் மசூதி மனுதாரர் இக்பால் அன்சாரி தாக்கப்பட்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாபர் மசூதி தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவண் கோரிக்கை விடுத்தார்.

வர்திகா சிங் என்ற தேசிய அளவிளான துப்பாக்கிச் சுடும் சாம்பியன் செவ்வாய்க்கிழமை அன்று இக்பால் அன்சாரி வீட்டுக்குள் நுழைந்து திடீரென தக்குதலில் ஈடுபட்டார்.

இந்நிலையில் பாபர் மசூதி - ராமர் கோவில் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் தொடர்ந்து 19-ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, ராமஜென்ம பூமிக்கு வெளியில் உள்ள நிலப்பகுதிக்கு நிர்மோஹி அகாரா அமைப்பு கோருவது குறித்து வாதம் நடைபெற்றது. முஸ்லிம் அமைப்பான சன்னி வக்ஃபு வாரியம் மற்றும் எம்.சித்திக் சார்பில் மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவண் ஆஜாராகி, நிர்மோஹி அகாரா அமைப்பினரை பக்தர்களாக நாங்கள் ஏற்றுக் கொள்வோம். அதில் எந்த கேள்வியையும் நாங்கள் எழுப்பவில்லை.

ஆனால், ராமஜென்ம பூமிக்கு வெளியில் உள்ள நிலத்தை அவர்கள் பராமரிக்க மட்டுமே முடியும். பக்தர்கள் என்பதற்காக அவர்கள் உரிமை கொண்டாட முடியாது என்றார். அதைக் கேட்ட நீதிபதிகள், ராம ஜென்ம பூமிக்கு வெளியில் உள்ள நிலப்பரப்பில் நிர்மோஹி அகாரா அமைப்பினர் பல ஆண்டுகளாக யாகம் நடத்தி வந்தனர். அவர்களை பக்தர்களாக நீங்களே ஏற்றுக் கொள்கிறீர்கள். பிறகு ஏன் அந்த நிலத்துக்கு அவர்கள் உரிமை கோரக் கூடாது? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதனிடையே, அயோத்தி வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி தாக்கப்பட்டது குறித்து விசாரிக்குமாறு ராஜீவ் தவண் கோரிக்கை விடுத்தார். அதைக் கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரம் குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் முஸ்லிம் தரப்பு மனுதாரர்களில் ஒருவரான முகமது ஹாசிம் இறந்ததையடுத்து, அவரது மகன் இக்பால் அன்சாரி இந்த வழக்கின் மனுதாரராக இணைக்கப்பட்டார். அவருக்கு காவல் துறை தரப்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...