ரஷ்யாவுக்கு ரூ.7 ஆயிரத்து 200 கோடி கடன் - மோடி அறிவிப்பு!

செப்டம்பர் 06, 2019 1135

புதுடெல்லி (06 செப் 2019): ரஷியாவின் தூர கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ரூ.7 ஆயிரத்து 200 கோடி கடன் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷியா நாட்டின் விலாடிவோஸ்டோக் நகருக்கு சென்றார். அங்குள்ள கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார். அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கிழக்கத்திய பொருளாதார அமைப்பு கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள பிற நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். மலேசிய பிரதமர் மகாதிர் முகமதுவை அவர் சந்தித்து பேசினார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த முடிவுகள் குறித்து மகாதிர் முகமதுவுடன் மோடி ஆலோசனை நடத்தினார். உறுதியான நிர்வாகம், சமூக-பொருளாதார நீதி வழங்க இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒடுக்குவது பற்றியும் இருவரும் விவாதித்தனர். பயங்கரவாதம் என்பது உலகளாவிய பிரச்சினை என்பதை ஏற்றுக்கொண்ட மகாதிர் முகமது, எந்தவகையான பயங்கரவாதத்தையும் மலேசியா எதிர்க்கும் என்று கூறினார். இந்தியாவும், பாகிஸ்தானும் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவால் தேடப்பட்டு வரும் மத பிரசாரகர் ஜாகீர் நாயக், மலேசியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். இதுகுறித்து இரு நாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து தொடர்பில் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மலேசிய பிரதமராக மகாதிர் முகமது தேர்ந்தெடுக்கப்பட்டது, வரலாற்று சிறப்புமிக்கது என்று கூறிய மோடி, மலேசியாவுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருப்பதாக கூறினார்.

அதற்கு மகாதிர் முகமது, இந்தியாவில் இருந்து மேலும் பல பொருட்களை இறக்குமதி செய்ய பரிசீலிப்போம் என்று கூறினார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை பிரதமர் மோடி சந்தித்தார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேசினர்.

வர்த்தகம், கலாசாரம், பாதுகாப்பு, 5ஜி உள்ளிட்ட துறைகளில் கூட்டு செயல்பாட்டை அதிகரிப்பது பற்றி விவாதித்தனர். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை பலப்படுத்துவது பற்றியும் ஆலோசித்தனர். வருகிற டிசம்பர் மாதம், ஷின்சோ அபே இந்தியாவுக்கு வருவது பற்றியும் பேசப்பட்டது.

மங்கோலிய அதிபர் கால்ட்மாகிங்ன் பட்டுல்காவையும் பிரதமர் மோடி சந்தித்தார். கலாசாரம், ஆன்மிகம் உள்ளிட்ட இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேசினர். இம்மாத இறுதியில், மங்கோலிய அதிபர் இந்தியாவுக்கு வருவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

இந்தியா-ரஷியா இடையிலான நட்புறவு, தலைநகரங்களில் இருநாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் நின்று விடாது. இது, மக்களிடையிலான உறவு.

ரஷியாவின் தூர கிழக்கு பிராந்திய வளர்ச்சிக்கு ரஷியாவுடன் தோளோடு தோள் சேர்ந்து நடைபோடுவோம். இந்த பிராந்திய வளர்ச்சிக்கு இந்தியா ஒரு பில்லியன் டாலர் (ரூ.7,200 கோடி) கடன் வழங்கும்.

இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடுகிறோம். காந்தி, ரஷிய எழுத்தாளரும், தத்துவவாதியுமான லியோ டால்ஸ்டாயால் ஈர்க்கப்பட்டார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினர். அவர்களின் நட்புறவை இந்தியாவும்-ரஷியாவும் முன்மாதிரியாக கொண்டு, உறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மோடி பேசினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...