மத்திய அரசை எதிர்த்து மேலும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி விலகல்!

செப்டம்பர் 06, 2019 394

பெங்களூரு (06 செப் 2019): ஜனநாயகத்தின் அடித்தள கட்டமைப்பு ஆடிப்போயுள்ளது எனக்கூறி மேலும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகியுள்ளார்.

தமிழகத்தை பூா்வீகமாக கொண்ட 2009 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிநியமனம் பெற்றிருந்த சசிகாந்த் செந்தில், கா்நாடக ஐஏஎஸ் அதிகாரியான பிறகு, 2009 முதல் 2012 ஆம் ஆண்டுவரை பெல்லாரி மாவட்ட உதவி ஆட்சியராகவும், பின்னா், சிவமொக்கா மாவட்ட ஊராட்சி தலைமை செயல் அதிகாரியாக 2 முறையும், அதன்பிறகு சித்ரதுா்கா, ராய்ச்சூரு மாவட்டங்களின் ஆட்சியராகவும், 2016 ஆம் ஆண்டில் சுரங்கம் மற்றும் நில அமைப்பியல் துறையின் இயக்குநராக பணியாற்றியிருந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு தென் கன்னட மாவட்டத்தின் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார். அதுமுதல் அம்மாவட்டத்தின் ஆட்சியராக இருந்து வந்த சசிகாந்த்செந்தில் (40), இன்று வெள்ளிக்கிழமை இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விலகக்கொள்வதாக அதிராடியாக தெரிவித்துள்ளார்.

இதுதொடா்பாக தனது நண்பா்களுக்கு எழுந்தியிருந்த கடிதத்தில், இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விலக இன்று வெள்ளிக்கிழமை கடிதம் கொடுத்துள்ளேன். தென்கன்னட மாவட்டத்தின் ஆட்சியராக இருக்கும் சூழ்நிலையில், எனது முடிவுக்கும் எந்த நிகழ்வுக்கும், தனிநபருக்கும் சம்பந்தமில்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். தென்கன்னட மாவட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என் மீது அதீத அன்பு வைத்திருந்தனர். அம்மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து இடையில் விலகி செல்வதற்காக அவா்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

பன்முகத்தன்மை கொண்ட நமது ஜனநாயகத்தின் அடித்தள கட்டமைப்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமரசம் செய்துகொள்ளும் சூழ்நிலை எழுந்துள்ளதால், இந்திய ஆட்சிப்பணியாளராக தொடா்வது அறநெறிகளுக்கு எதிரானதாக உணா்ந்ததால், பதவிவிலகல் முடிவை எடுத்திருக்கிறேன். எதிர்காலத்தில், நமது நாட்டின் அடிப்படை கட்டமைப்பு பெரும் சவாலுக்கு உட்படுத்தப்படும் ஆபத்து நிறைந்திருப்பதாக கருதுகிறேன்.

எனவே, இந்திய ஆட்சிப்பணியில் இருந்து விலகியிருப்பது சரியானதாக இருக்கும் என்பதோடு, அனைத்து மக்களின் நல்வாழ்வுக்காக எனது பணியை தொடா்ந்து ஆற்றுவேன். இது அவ்வளவு எளிதானதல்ல என்பதையும் அறிந்துள்ளேன். எல்லா நிலையிலும் என்னோடு பணியாற்றிய அனைவரையும் இதய அன்போடு நினைத்து பார்க்கிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.‘ என்று தெரிவித்துள்ளார்.

சசிகாந்த்செந்திலின் பதவிவிலகல் முடிவு தென்கன்னட மாவட்டமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே காஷ்மீர் மக்களுக்காக குரல் கொடுக்கும் விதமாக ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் பதவி விலகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்னொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...