மருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை!

செப்டம்பர் 23, 2019 249

மும்பை (23 செப் 2019): ஐந்து மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ உலகில் இந்தியா மகத்தான சாதனை புரிந்துள்ளது.

சூரத்தைச் சேர்ந்த சுசித்ரா - க்ருனல் வால்வியின் செல்ல மகள் இப்ஸா. குழந்தை பிறக்கும் போதே மஞ்சள் காமாலையுடன் பிறந்தது. வழக்கமான சிகிச்சைகளால் மஞ்சள் காமாலை குணம் அடையாததால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு பிலியரி அட்ரெஸியா எனப்படும் குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

20 ஆயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு இந்த குறைபாடு இருக்கும். அதாவது, கல்லீரல் முழுமையாக வளர்ச்சியடையாத நிலை. இதற்கு அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், தாமதித்தால் பிரச்னை மோசமாகிவிடும் என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.

5 மாதக் குழந்தையாக இருக்கும் போது இந்த நோய் கண்டறியப்பட்டதால் கல்லீரல் மாற்று மட்டுமே ஒரே தீர்வு என்று குளோபல் மருத்துவமனை மருத்துவர் அனுராக் ஷ்ரிமால் தெரிவித்தார்.

சுசித்ராவின் தங்கை க்ருபாலியின் கல்லீரலின் ஒரு பகுதியை எடுத்து இப்ஸாவுக்கு பொறுத்தியுள்ளனர். பூரண குணம் அடைந்து வீடு திரும்பிய இப்ஸாவுக்கு மஞ்சள் காமாலையும் குணமடைந்து வருவதாகவும், தற்போது அவர் நன்கு விளையாடி மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இப்ஸாவின் தாய் சுசித்ரா தெரிவித்துள்ளார்.

இந்த அறுவை சிகிச்சைக்காக ரூ.16 லட்சம் செலவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...