ப. சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் திடீர் சந்திப்பு!

செப்டம்பர் 23, 2019 281

புதுடெல்லி (23 செப் 2019): திகார் சிறையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த மாதம் கைது செய்தது. பின்னர், சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்ட அவர், அக்.3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், தில்லியில் உள்ள திகார் சிறையில் ப.சிதம்பரம் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இன்று (திங்கள் கிழமை) சந்தித்துப் பேசினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...