கர்நாடகாவில் பாஜக ஆட்சி கவிழுமா?

செப்டம்பர் 23, 2019 399

பெங்களூரு (23 செப் 2019): கர்நாடகாவில் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் அங்கு தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகாவில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் அறிவிப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், அதே நேரத்தில் இடைத்தேர்தல் முடிவுகள் கர்நாடகாவில் ஆட்சி மாற்றத்தைக் கூட ஏற்படுத்தலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

கர்நாடகாவில் கடந்த 2018ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பாஜக அதிகப்படியான(104) இடங்களை கைப்பற்றியது. ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்கள் பாஜகவிடம் இல்லாத சூழ்நிலையில், காங்கிரஸ்(79) - மதச்சார்பற்ற ஜனதா தளம்(37) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின.

குமாரசாமி முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்தே, காங்கிரஸ் - மஜத இடையே சில குழப்பங்கள் நிலவி வந்தன. இதன்பின்னர் கடந்த ஜூலை மாதம் கர்நாடக அரசியலில் பல திடீர் மாற்றங்கள் நிகழ்ந்தன. பல்வேறு குழப்பங்களுக்கு இடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 14 பேர் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள் 3 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர்.

பின்னர் முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் எடியூரப்பா. கடந்த ஜூலை 26ம் தேதி எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றார்.

ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களின் கடிதத்தை ஏற்காமல் காலம் தாழ்த்தி வந்த சபாநாயகர் ரமேஷ் குமார், பின்னர் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதுடன், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி, 17 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து, 17 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.

ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலை அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களில் காலியாகவுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலையும் அறிவித்துள்ளது.

அதன்படி, கர்நாடகாவில் காலியாகவுள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 17 தொகுதிகளில் மஸ்கி மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் ஆகிய இரு தொகுதிகளில் 2018 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பான வழக்குகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதன் காரணமாக இந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை.


கர்நாடகாவில் இடைத் தேர்தல் முடிவுகளை பொறுத்து ஆட்சி மாற்றம் கூட நிகழலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கர்நாடக சட்டப்பேரவையில் தற்போது பாஜகவின் பலம் 105+1(சுயேச்சை) உள்ளது. காங்கிரஸ்- 66, மஜத -34, பகுஜன் சமாஜ் -1 என எதிர்க்கட்சிகள் 101 இடங்களை கைவசம் வைத்துள்ளன. இந்த நிலையில், 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் சட்டப்பேரவையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியும் மஜதவும் தனித்தனியே போட்டியிடுகிறமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...